Wednesday, December 7, 2011

வேற்று கிரகவாசிகள்

நீங்கள் நம்பாமல் போகலாம்
ஆனால் சிலர் இருக்கிறார்கள்
மிகச்சிறிய அளவே சச்சரவுகள்
அல்லது துன்பங்களுடன்
வாழ்க்கையைக் கடந்து கொண்டு.

அவர்கள் நன்கு உடுத்துவார்கள்
நன்றாக உண்பார்கள்
நன்றாக உறங்குவார்கள்.
அவர்கள் தங்களது குடும்ப வாழ்க்கையில்
நிறைவாக இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் துயரமான கணங்களும் உண்டு
ஆனாலும்
உடனடியாகத் தொல்லையற்றவர்களாகி விடுவதோடு
பெரும்பாலும்
மிக நன்றாக உணர்கிறார்கள்.

அதோடு
அவர்கள் சாகும்போது
அது ஒரு எளிமையான சாவாய் இருக்கிறது.
பெரும்பாலும்
அவர்கள் உறக்கத்தில்.

சாள்ஸ் புகாவ்ஸ்கி

ரலாறு மனிதனை பிய்த்துப் போடுகிறது.
மனிதன் வரலாற்றைக் குதறிப் போடுகிறான்.
பழி வாங்குதல் மிகவும் நிம்மதி அளிப்பது.
வார்த்தைகள் வார்த்தைகளைத் தின்று விடுகின்றன.
யாராவது பசியாறினால் சரிதான்.

Saturday, October 22, 2011

சிறு பாம்பு

டுச் சாலையில் நசுங்கிக் கிடக்கும் 
கவனமில்லா சிறு பாம்பு 
எனது வார்த்தை.

Wednesday, October 5, 2011

கவிதைகள் போய்க்கொண்டிருக்கையில்

கவிதைகள் ஆயிரக்கணக்காகப் போய்க்கொண்டிருக்கையில்
நீ உணருகிறாய் 
நீ செய்தது 
ரொம்பக் கொஞ்சம். 

சார்லஸ் பூகொவ்ஸ்கி

Sunday, October 2, 2011

நினைத்துக்கொள்ள ஒரு புன்னகை


நாங்கள் தங்க மீன்கள் வைத்திருந்தோம். 
பெரிய சாளரத்தை மூடிக்கொண்டிருக்கும் 
கனமான திரைச்சீலைக்கு அருகிலுள்ள 
ஒரு கிண்ணத்தில் 
அவை சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தன.

எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருந்த, 
நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பிய, 
எனது தாய் கூறினாள், " மகிழ்ச்சியாய் இரு ஹென்றி!".
அவள் சொன்னது சரிதான்.
மகிழ்ச்சியாய் இருப்பது நல்லதுதான்
உங்களால் முடிந்தால்.
ஆனால், 
தனது 6 அடி 2 அங்குல உடலில் 
கொதித்துக் கொண்டிருந்த எனது தந்தை 
அவளையும் என்னையும் 
ஒரு வாரத்தில் பல முறை அடித்துகொண்டிருந்தார்.
ஏனென்றால்,
அவரை உள்ளிருந்து தாக்குவது எது என்று 
அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

மகிழ்ச்சியாக இருக்க விரும்பும்,
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தாக்கப்படும்,
எனது தாய், முட்டாள் பெண்,
என்னிடம் மகிழ்ச்சியாயிருக்கச் சொல்கிறாள்:
"புன்னகை செய், ஹென்றி! ஏன் நீ எப்போதும் புன்னகைக்கக் கூடாது?"
பிறகு அவள் புன்னகைப்பாள்,
எப்படியென்று எனக்குக் காட்ட.
அதுவே நான் பார்த்ததிலேயே 
மிகவும் துயரமான புன்னகை.

ஒருநாள் தங்கமீன்கள் இறந்து போயின.
மொத்த ஐந்தும்.
தங்கள் பக்கவாட்டில் அவை தண்ணீரில் மிதந்தன
கண்களைத் திறந்தவாறே.
அப்புறம் எனது தந்தை வீடு சேர்ந்த பின் 
அவற்றை 
சமயலறைத் தரையில் பூனைக்கு வீசினார்.
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்  
எனது தாய் புன்னகைத்துக் கொண்டிருக்கையில்.

சார்லஸ் பூகாவ்ஸ்கி

Saturday, April 16, 2011

16 பிட் இன்டெல் 8088 சிப்


ப்பிள் மகிண்டோஷைக் கொண்டு 
ரேடியோ ஷாக் ப்ரோகிராம்களை 
அதன் டிஸ்க் டிரைவில் 
ஓட்ட முடியாது.

IBM கணினியில் உருவான கோப்பை 
காமடோர் 64 டிரைவால் படிக்க முடியாது.

காபிரோவும் ஆஸ்போணும்
CP/M ஆப்பரேடிங் சிஸ்டத்தை உபயோகித்தாலும்
ஒன்றின் மொழியை மற்றொன்றால் படிக்க முடியாது
 ஏனென்றால் 
அவை டிஸ்க்கை எழுதும் முறை மாறுபட்டது.

டாண்டி 2000 
MS DOS ஐ உபயோகிக்கிறது என்றாலும் 
IBM கணினிக்காக ஏற்ப்படுத்தப்பட்ட 
பல ப்ரோகிராம்களை உபயோகிக்க முடியாது
சில பிட்களோ பைட்களோ மாற்றப்படாதவரை.

ஆனால் காற்று இன்னும் சவன்னாவின் மேலாக 
வீசிக்கொண்டுதானிருக்கிறது.
வசந்த காலத்தில் 
வல்லூறானது
தனது பெட்டைகளின் முன் 
சிலுப்பிக்கொண்டும் ஆடிக்கொண்டும்தானிருக்கிறது.

சாள்ஸ் பூகொவ்ஸ்கி

Tuesday, February 1, 2011

சாவு நேர மொபைல் அழைப்புகள்

        கார்த்தி வீட்டு முற்றத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். நானும் கார்த்தியும். உள்ளே 'ஓம்சக்தி' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பெருங்குரலெடுத்து கத்தினார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது கார்த்தியின் அப்பா விக்கென்று எம்பி அடங்கினார். எல்லோரும் கதற கார்த்தி நாடி பார்த்தான்.
'வரதா நாடி பாரு'
கையைப் பிடித்தேன். ஒன்றும் சொல்லமுடியவில்லை. எல்லோரும் செய்தியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. நீண்ட பெரும் வாதையிலிருந்து அவர் விடுதலை அடைந்த செய்தியை.
           வெளியே வந்து நின்றேன். யாருக்கெல்லாம் சொல்வது. மரணத்தை அறிவிப்பது பெரிய துன்பம். முதலில் கார்த்திக்கும் எனக்கும் பொதுவான நண்பர்களின் பட்டியல். ஜெயகார்த்தி, பாலா, லயனல், முத்து, சூர்யா, ஹோமேஷ். . . . . . . . . . ..
 'டேய், கார்த்தி அப்பா இறந்துட்டாரு'.
'எப்ப?'
'இப்பதான்'
'எப்பிடி?'
 விஷயம் தெரியாதவர்களுக்கு சுருக்கமாகவும் தெரிந்தவர்களுக்கு தகவலையும் சொன்னேன்.
மறுநாள் இடுகாட்டில் கார்த்தி கூப்பிட்டான்.
'டே, வி பி வந்துக்கிட்டிருக்காரு. அவர்ட்ட எங்க வரன்னு சொல்லிருடா.'
பிறகு கால்.
'வரதன் எங்க இருக்கீங்க?'
'சுடுகாட்டுல சார். நீங்க வர எவ்வளவு நேரமாகும்?'
'அரைமணி நேரமாகும்?'
'அப்ப இங்க காரியம் முடிஞ்சிரும். நீங்க நேரா கார்த்தி வீட்டுக்குப் போயிருங்க.'

      பாலா ஒருநாள் காலை நான் அலுவலகத்திலிருந்த போது கூப்பிட்டான்.
'வரதா அம்மா இறந்துட்டாங்கடா'
குரலின் அடர்த்தி குறைந்திருந்தது. அழுதுகொண்டிருக்கிறான்.
'வர்றேன் பாலா'
மீண்டும் பட்டியல். ஜெய், அலீம், ஹோமேஷ், முத்து . . . . .. . . .. . . .. .

     ண்பர் கோபி சில வருடங்களுக்கு முன்பு ஒருநாள் மொபைலில் கூப்பிட்டார்.
'வரதா அம்மா இறந்துட்டாங்க'
'என்னாச்சு கோபி திடீர்னு ?'
மௌனம். 
'எங்க இருக்கீங்க?'
' கார்ல கொண்டுபோயிட்டிருக்கோம்'
இறப்பின் துயரத்திலிருந்து ஒருவரை தேற்றுவது தெரியவில்லை. குறிப்பாக மொபைலில். அதிலும் குறிப்பாக இறந்தவரோடு(?) காரில் பயணிக்கும் போது.

      திருமலையின் அம்மா நீண்ட காலமாக சிகிச்சையிலிருந்தார். கேன்சர் என்று நினைக்கிறேன். மதுரை மீனாக்ஷி மிஷனில் இறந்து போனார். திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்லும்போது கால் செய்தான். நான் யாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கவில்லை.

         சித்திக் இரண்டு வருடம் என்னுடன் திருவல்லிகேணியில் தங்கி வேலை தேடினான். சித்திக்கின் அப்பா நீண்ட நாள் சுகமில்லாமல் பின் இறந்தார். திருநெல்வேலி மேலப்பாளையத்தில். அதற்குப் பலவருடங்களுக்கு முன் அதே மேலப்பாளையத்தில் சித்திக் அண்ணன் திருமணத்திற்கு சென்றிருந்தோம் . இரண்டு நாட்கள் தாமிரபரணியில் சரியான கொண்டாட்டம்.
         சென்னையிலிருந்து மதுரை சென்று பின் திருநெல்வேலி செல்ல திட்டம். 2005 ஆக  இருக்கலாம். காலையில் விழிப்பு வந்தபோது பஸ் திருச்சி கூட தொடவில்லை. உளுந்தூர்பேட்டையைத் தாண்டி ஒரு ஊரில் நிற்கிறது. நூற்றுக்கணக்கில் வாகனங்கள் முன்னும் பின்னும். சிறிது தூரத்தில் சிறிய பாலம் உடைந்து வெள்ளம் ரோட்டில் ஓடியது. திருச்சி செல்லும் ரோடு துண்டிக்கப் பட்டிருந்தது. அந்த சிறிய ஊரே வாகனங்களால் நிரம்பியிருந்தது. எல்லோரும் காலைகடன் கழிக்க இடம் தேடினர். பின்னர் நேரம் செல்ல செல்ல இது டீதண்ணியோடு போகாது என்று உணவைத்தேடி அலைந்தனர். அவ்வளவு டிமாண்டை அந்த ஊரின் ஹோட்டல்கள் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பார்க்க முடியாது. நான் பிஸ்கட் டீயோடு முடித்துக்கொண்டேன். எல்லா வாகனங்களிலிருந்தும் பல கிமீ  தூரத்திலிருந்து நடந்து வந்து வெள்ளத்தைப் பார்த்துச் சென்றனர். பொழுது போக வேற வழி? எப்ப கிளம்புவோம்னே தெரியாதபோது.
         மொபைல் சார்ஜ் தீர்ந்துபோனது. முற்றிலும் தொடர்பற்ற நிலை. எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. வழமையான பயணத்தின் அலுப்பிலிருந்து மாறி அது சாகசமிக்க ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது. பிறகு பின் மதிய வேளையில் வாகனங்களை  வேறு வழியில் திருப்பி விட்டதில் இரவு ஏழெட்டு மணியளவில் சேலம் அடைந்தோம். முதல் நாளிரவு சாப்பாட்டுக்குப் பின் அங்கே தான் சாப்பிட்டேன். மறுநாள் காலையில் மதுரையில் குளித்து கிளம்பி திருநெல்வேலி. சித்திக்கிடம் அரைமணி தான் பேசியிருப்பேன். பிறகு மதுரை. இந்த மரணத்தை நான் யாருக்கும் தெரிவிக்க வேண்டியிருக்கவில்லை.

       பெரியம்மா மதுரையில் எனது வீட்டில் இறந்த போது நான் சென்னையில் இருந்தேன். இரவே கிளம்பினேன். மறுநாள் காலையில் எடுக்கிறார்கள். சோதனையாக பஸ் கொடூரமான ஸ்லோ. காலை ஆறு மணிக்குப் பின் தொடர்ச்சியாகக் கால்கள்.
'இப்ப எங்க இருக்க?'
'பஸ் துவரங்குறிச்சி தாண்டிரிச்சு'.
காலை பதினோரு மணியளவில் தான் போனேன். தெருவே காத்திருந்தது. துக்கத்தை விட காக்க வைத்த கூச்சமே அதிகம்.

       My father paased away.
சுதர்ஷன் SMS அனுப்பினான். உடனே பேசாமல்  இரண்டு நாள் கழித்து அழைத்தேன்.

      +2 தேர்வுக்குப் பின் லயனல் அப்பா இறந்து போனார். மொபைலோ டெலிபோனோ வீட்டில் இல்லாத காலத்தில் எப்படி பலர் அங்கே சேர்ந்தொம்னு தெரியல.

      2007 மே மாதம் இருள் பிரியாத அதிகாலையில் மொபைல் அலறியது.
ஈஸ்வரன் மாமா.
'வரதா, எல்லாரையும் கூட்டிட்டு அவனியாபுரம் வா'.
'என்னாச்சு?'
'அத்த தவறிட்டாங்க'
'யாரு பெரியம்மாவா?'
'இல்ல. சின்னத்த'

அந்த சொல்லுக்கும் மாலை கொள்ளி வைத்து விட்டு திரும்புவதற்கு இடையிலான சம்பவங்கள் மங்கலாகவே இருக்கிறது.

அம்மாவை நடுவீட்டில் சேரில் உட்கார்த்தியிருந்தார்கள்.

இடையில் லயனலோ யாரோ என்னை வெளியில் கூடிச் சென்று டீயோ காபியோ குடுத்தார்கள்.

ரோடில் வாடிப்பட்டி மேளக்காரர்கள் மூன்று பேர் தாளம் போட்டவாறே கால்களை ஒரே மாதிரி வைத்து சீராக ஆடினார்கள்.

வானம் மழை பொழியத் தயாராக இருந்தது.

மொட்டை எடுக்கும் முன் தலையில் விட்ட தண்ணீர் கழுத்து வழியாக முதுகில் வழிந்து புட்டம் வரை சென்றது.

          அம்மாவின் முகத்தை கடைசி வரை பார்க்கவேயில்லை. கடைசியாகப் பார்த்தது எனது பார்ட்னர் வித்யாசாகர் மதுரை வந்தபோது சிக்கன் சமைத்து கொடுத்தபோதுதான். பார்க்காதது நல்லதுதான்.

          வரமுடியாத நண்பர்கள் மொபைலில் அழைக்க இரண்டு நாளானது. முதன் முறையாக நான் மொபைலில் துக்கம் விசாரிக்கப் பட்டேன். தேற்றுவதில் எல்லாரும் என்னைப்போலதான். அதுவும் மொபைலில்.

         பொதுவாகவே தூங்க 12 மணிக்கு மேல் ஆகும். காலையிலும் சீக்கிரம் எழுந்துவிடுவேன். பகல் தூக்கம் கிடையாது. அதனால் அந்த அதிகாலைக்கு பிறகு என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் மொபைல் அழைப்புகள் பெரும் பதற்றத்தைக் கொடுக்கின்றன. கெட்ட சேதியை எதிர்நோக்கும் பதற்றம். இதிலிருந்து மீள வேண்டும்.

ஆதலால் நண்பர்களே,
அருமையான ஒரு  பீருக்குப் பின்போ
அற்புதமான ஒரு  கலவிக்குப் பின்போ
சோர்வளிக்கும்  ஒரு தோல்விக்குப் பின்போ
கசப்பூட்டும்  ஒரு அவமானத்திற்குப் பின்போ
நீங்கள் இரவில் விழித்திருந்தால்
எனக்கு கால் செய்யுங்கள்.




Sunday, October 3, 2010

காம்ரேடுகளுடன் நடத்தல் - அருந்ததி ராய்

காட்டில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் போர், இந்தியா பெருமையும் வெட்கமும் ஒருங்கே அடையும் போர். "ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட்" அறிவிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் உள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சர், ப.சிதம்பரம் ( போரின் சி.ஈ.ஒ.), அப்படியொன்று இல்லையென்றும் ஊடகங்களின் பரப்புரைதான் என்றும் சொல்கிறார். ஆனாலும் குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கப்பட்டும் துருப்புகள் களமிறக்கப்பட்டும் உள்ளனர். அரங்கம் மத்திய இந்தியாவின் காடுகளில் இருந்தாலும் நம் எல்லோருக்கும் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு பக்கம் பணம், ஆயுதங்கள், ஊடகங்கள் மற்றும் வளரும் வல்லரசின் ஆதரவுள்ள பெரும் துணை ராணுவம். மற்றாரு பக்கம் அருமையாகக் கட்டமைக்கப்பட்ட, அசாதாரணமான, ஆயுதப்போராட்ட வன்முறை வரலாறு கொண்ட, பெரும் ஊக்கத்தோடு செயல்படும் மாவோயிஸ்ட் கெரில்லாக்களின் ஆதரவுடன் நிற்கும் மரபான ஆயுதங்கள் தரித்த கிராமத்தவர்கள். ஒவ்வொரு தடவையும் மாவோயிஸ்டுகள் (அல்லது அவர்களது முந்தைய அவதாரங்கள்) தோற்க்கடிக்கப்பட்டது மட்டுமல்லாது முற்றிலும் ஒடுக்கப்பட்டதுபோல் காணப்பட்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் முன்பை விட அதிக ஒருங்கிணைப்புடனும் அதிக உறுதியுடனும் அதிக ஆளுமையுடனும் உயிர்த்து எழுந்துள்ளனர். லட்சக்கணக்கான பூர்வகுடி மக்களின் தாயகமான, கார்ப்பரேட் உலகின் கனவுலகமான சட்டிஸ்கர், ஜார்க்கன்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தின் தாது வளமிக்க காடுகளில் இன்று மீண்டும் அந்த எழுச்சி பரவுகிறது. இந்திய சனநாயகத்தின் ஒழுக்க அடிச்சரடான இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950 இல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பூர்வகுடி மக்களுக்கு அது ஒரு துயரமான நாள். காலனியக் கொள்கைகளைப் பின்பற்றிய அரசியலமைப்புச் சட்டம், பூர்வகுடிகளின் தாயகத்திற்கு அரசைப் பொறுப்பாக்கியது. இது, ஒரே இரவில் மொத்த பூர்வகுடிமக்களையும் அவர்களது சொந்த மண்ணிலேயே நிலவுரிமை அற்றவர்களாக்கியது. கடந்த ஐந்தாண்டுகளில் இரும்பாலைகள், இரும்புத்தொழிற்ச்சாலைகள், மின்சார நிலையங்கள், அலுமினியச் சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக, பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, மிக ரகசியமாக, சட்டீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கன்ட் மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுடன் கைச்சாத்திட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பணமாக உருமாற பூர்வகுடிகள் அகற்றப்பட வேண்டும். அதனாலேயே இந்தப் போர்.


மாவோயிஸ்ட் இயக்கத்தின் 'தலையை எடுப்பதற்காக' இந்தியப் போலீஸ் உயரதிகாரிகளுக்கு 'குறி வைத்துப் படுகொலை செய்யும்' தொழில்நுட்பத்தை இஸ்ரேலின் மொசாத் கற்றுக்கொடுப்பதாக ஒரு இணையக் கட்டுரை சொல்கிறது. இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட புதிய தளவாடங்களைப்பற்றி பத்திரிகைகளில் பேச்சடிபடுகிறது - லேசர் ரேஞ் பைண்டர்ஸ், தெர்மல் இமேஜிங் எக்விப்மென்ட் (இருட்டில் உருவங்களைக் கண்டறியும் கருவி), மற்றும் அமெரிக்க ராணுவத்தின் பிரபலமான ஆளில்லா விமானங்கள் போன்றவை. ஏழைகளுக்கு எதிராகப் பிரயோகிக்கச் சிறந்த ஆயுதங்கள்.

Saturday, July 25, 2009

snafu


2008 இல் எனது நிறுவனச் செலவுகள் மாதம் இரண்டு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பங்கு வணிகப் பரிவர்த்தனைகள் சுத்தமாகக் குறைந்தது. கமாடிட்டீஸ் (பண்டகச் சந்தை) ஓரளவு கைகொடுத்தது.மார்கெடிங் மேனேஜர்களை இறுக்கிப்பிடித்தும் பயனில்லை. வருட இறுதியில் செலவுகளைக் குறைக்க பயனில்லாப் பணியாளர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம். மொத்த செலவில் தோராயமாக ஐம்பது சதவிகிதம் சம்பளமே. 2009 ஆரம்பத்தில் சுத்தமாய் மெலிந்து இருந்தது கம்பெனி. க்ளையெண்டுகள் ஓரளவு தக்கவைக்கப்பட்ட நிலையில் 2008 வணிகத்தைச் செய்தாலே லாபம்தான். தற்போதைய கட்டமைப்பிலேயே அதைச் செய்யவும் முடியும். இருக்கிறவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
இதே காலகட்டத்தில் பங்குச் சந்தை நன்கு மேலேறியுள்ளது (2007 இறுதியில் முதலீடு செய்தவர்கள் பொறுமை). டோ ஜோன்ஸ் மற்றும் பல இண்டக்ஸகளும் முன்னேறியிருக்கின்றன. இதற்கு காரணமாக பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் எதிர்பாராத லாபம். ரிசஷன் என்று சொல்லிக்கிட்டு எப்பிடி லாபம் கொழிக்குது? இந்த நிறுவனங்களின் எதிர்பாராத (?!) லாபத்துக்குக் காரணம் அவை கடந்த வருடம் செய்த ஆட்குறைப்பும் செலவுக்கட்டுப்பாடும் தான். படத்தைப் பாருங்கள்.
ரிசஷன் ஆரம்பித்த 2007 டிசம்பரிலிருந்து 65 லட்சம் வேலைகள் காலி. முந்தைய ரிசசன்களுக்குப் பிந்திய காலத்தில் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை தள்ளிப் போடவே செய்தன. இருப்பவர்களை வைத்து வேலை வாங்கின. இப்போது பொருளாதாரம் திரும்புவது போல் தோன்றினாலும் வேலையிழந்தோர் எண்ணிக்கை முன்பை விட அதிகம். ஆட்குறைப்பு மிகத் துரிதமாக நடந்தது. தேவையும் உற்பத்தியும் பரவாயில்லை என்கிற செய்திகள் வந்தாலும் உண்மையில் அதிகரிக்கும் வேலையிழப்பு இந்த ரிசசனை முந்தையவற்றிலிருந்து ஆழமானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது.
SNAFU = situation normal all fucked up

Michael Jackson

மைக்கேல் ஜாக்சன்

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது பாடத்தைத் தவிர பிற விசயங்களில் அக்கறை காட்டுவது எனக்கோ ஜெயகார்த்திக்கோ மற்ற பசங்களைப்போல குழப்பத்தை ஏற்ப்படுத்தவில்லை. கார்த்தியை எனக்குப் பழக்கமான ஆறாம் வகுப்பிலிருந்து நாங்கள் அப்படியே. அதுவே நாங்கள் மட்டுமே விவாதிக்கக் கூடிய ஒரு தளத்தை ஏற்படுத்தியது. புத்தகங்கள், இசை, சினிமா. புத்தகங்கள் ஆனந்த விகடன், இந்தியா டுடே, நாவல்கள் போன்றவை. இசை திரையிசை. மேற்சொன்ன இரண்டும் எனக்குக்கு கிடைத்தது கார்த்தியின் வீட்டில். பிறகு ஆங்கிலப் படங்கள். ஏழாம் வகுப்பு படிக்கும்போது நாங்கள் வார இறுதியில் மாப்பிள்ளை வினாயகரில் ஸ்பீல்பெர்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ரூசேட், அர்னால்டின் கமாண்டோ, போன்ற பல படங்களைப் பார்த்தோம். இதில் இசையும் புத்தகங்களும் கார்த்தியின் அண்ணன் வாங்கிபோடுவது. கார்த்தியின் அண்ணன் அலாதியான ரசனை கொண்டவர்.

ஒரு நாள் கார்த்தி வீட்டில் வித்தியாசமான பிளாஸ்டிக் கவரோடு ஒரு கேசட் இருந்தது. அப்போது கேசட் கவர் வேறு மாதிரி இருக்கும். கவரே வித்தியாசமாய் ஈர்த்தது. பிரதானமாய் இரு கண்கள். திருத்தமாய் மையிட்டது போல. சுற்றிலும் ஆபரண நுணுக்கத்தோடு பல சித்திரங்கள். பார்த்துக்கிட்டேயிருக்கலாம். அதில் 'மைக்கேல் ஜாக்சன்', 'டேஞ்சரஸ்' என்று இருந்தது. உள்ளே ஒரு சிறு புத்தகம். புத்தகம் கூட இல்லை.நீண்ட தாள் மடித்து வைக்கப்பட்டிருந்தது. பாடல் வரிகள். கார்த்தி வீட்டில் அப்போது அருமையான நேஷனல் பேனசோனிக் ஸ்டீரியோ ப்ளேயர் இருந்தது. முதல் பாடல் ஆரம்பிக்கையில் கண்ணாடிப் பாத்திரம் உடைவது போல சத்தத்தோடு ஆரம்பித்தது. ஜாம் என்ற முதல் பாடல் ஒரு ராப். மைக்கேல் ராப் அதில்தான் முயற்சிக்கிறார். பாடல் வரிகளைப் பின் தொடருவத்தின் சிரமத்தை சொல்லவே வேண்டாம். அதிரடியான இசையின் பின்னணியில் முனுமுனுத்தது போல. அந்த ஒரு பாடலையே பல தடவை கேட்டேன். கேசட்டில் முதல் பாடலை ரீவைண்ட் செய்வது சுலபம். நடுவில் இருக்கும் பாடல்களைக் கேட்க ரீவைண்ட் செய்வது துன்பம். மற்ற பாடல்கள் ராப் இல்லாததால் பல தடவைகளுக்குப்பிறகு பிடிபட்டது. அதுவரை தமிழ் சினிமா பாடல்களையே கேட்டுவந்த எங்களுக்கு இது வேறு கதவுகளைத் திறந்தது. இந்தப்பாடல்களைக் கேட்கவே சனிக்கிழமைகளில் கார்த்தி வீட்டில் கிடப்பேன்.

+1 காலத்தில் கார்த்தி காதல் வயப்பட்டபோது அழகான ஆர்ட் தாளில் (இதையெல்லாம் உயர்ந்த ரசனையோடு செய்வான்) காதல் வரிகளோடு ஜாக்சனின் 'ரிமம்பர் தி டைம்' போன்ற பாடல்களின் வரிகளையும் (அதுக்கு என்ன புரிஞ்சுச்சோ?) எழுதிக்கொடுத்தான். கடிதம் சில நாட்களில் திரும்பி வந்தது.
சித்தரஞ்சன் வீட்டில் த்ரில்லர் கேட்டேன். அப்போது பல கேசட் கடைகளில் வெளுத்த வெளுத்த முகத்தில் சுருள் முடிகள் தொங்க, இறுக்கமான கருப்பு லெதர் ஆடையில் பல உலோக பக்கில்களோடு BAD என்ற ஆங்கில எழுத்துக்களோடு மைக்கேல் போஸ்டர் கட்டாயம் இருக்கும். கிருஷ்ணாபுரம் காலனியில் குடியிருக்கையில் வீட்டில் வாங்கிய அசம்பில்ட் செட்டில் மைக்கேலின் டேஞ்சரஸ் ஆல்பத்தை அலற விடுவேன். எனது சகோதரிகள் இதனால் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இளைய சகோதரர்கள் வேறு வழி இல்லாமல் என்னைப் பின் தொடர்ந்து இருக்கலாம்.

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கையில் 'ஹிஸ்டரி' வந்தது. 200 ரூபாய் விலையில் இரண்டு கேசட் தொகுதியை மதுரை கீஷ்டுகானத்தில் வாங்கினேன். 'ஸ்க்ரீம்', 'தே டோன்ட் கேர் அபவுட் அஸ்', 'எர்த் சாங்' போன்ற புதிய பாடல்களோடு ஒரு கேசட். மற்றது 'பில்லி ஜீன்', 'பீட் இட்' போன்ற பழைய பாடல்களின் தொகுப்பு. காதலோடும் 'ஹில் தி வேர்ல்ட்' என்று உலகை ரட்சிக்கும் கனவோடும் இருந்த மைக்கேல் இல்லை இது. உலகத்தால் மன உளைச்சலுக்கும் துன்பத்துக்கும் ஆளான மைக்கேல். கோபமும் விரக்தியும் தெறிக்கும் பாடல்கள். பெரும் பொருளாதார நெருக்கடியைக் குடும்பத்தில் அனுபவித்துக்கொண்டிருந்த நான் எளிதாக அதில் ஒன்றினேன். இருநூறு ரூபாயை இதில் செலவழித்த குற்ற உணர்வும் கூட. நெருங்கிய நண்பனிடம் கூட நிலையைப் பகிர்ந்து கொள்ளாமல் மைக்கேலை போலவே வெளிறிய ஒரு முகமூடியை அணிந்து உலவிய காலம். 'த்ரில்லர்' மற்றும் 'டேஞ்சரஸ்' கால மைக்கேலை விட 'ஹிஸ்டரியின்' கதறும் மைக்கேல் நெருக்கமானவராயிருந்தார்.

இந்த காலத்தில் தான் வீடியோக்களை 'எம் டி வீ ' யில் பார்க்க முடிந்தது. இதற்க்கு முன் லயனல் வீட்டில் 'ஜாம்', 'ப்ளாக் ஆர் ஒயிட்' வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு இரவு லயனல் வீட்டில் பல நண்பர்களோடு சீ டி ப்ளேயரில் மைக்கேலைக் கதற விட்டோம். சுவாரஸ்யமான அந்த இரவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பீலிங்கில் இருந்தோம். அப்போது பலர் காதல் வயப்பட்டிருந்தனர். ஒருவன் தன காதலியோடு உணர்வு பொங்கக் கதைத்த போது ஸ்பீக்கர் போனில் கேட்டு சிரித்தோம்.
பிறகு 'ப்ளட் ஆன் தி டேன்ஸ் ப்ளோர்' வந்தது. 'கோஸ்ட்' வீடியோ மைக்கேலின் 'த்ரில்லர்' போன்ற வெற்றிக்கான முயற்ச்சி. 'த்ரில்லரே' மைக்கேலின் மிகப்பெரிய வெற்றியும் சுமையும் ஆனது. மீண்டும் அவரால் அதைச் செய்யவே முடியவில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கான விசாரணை, பண நெருக்கடிகள் அவரைப் படைப்புலகிலிருந்து விரட்டியிருக்கலாம். பிறகு வெளிவந்த 'இன்வின்சிபிள்' ஆல்பத்தை நான் கேட்கவேயில்லை. எனது இளைய சகோதரன் அதைப்பற்றிக் குறிப்பிட்டபோது 'அப்படியா?' என்றதோடு முடிந்தது. கடந்த பதினைந்து வருடங்களில் ராக், ராப், ரிதம் அன் ப்ளூஸ், ஹிப் ஹாப் போன்ற இசை வடிவங்களில் 'நிர்வாணா', 'எரிக் கிளாப்டன்', 'எமினெம்', 'ரேடியோஹெட்' என்று கேட்டல் விரிவடைந்தது ஒரு காரணம்.

பண நெருக்கடியிலிருந்து மீள நீண்ட இசைப்பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது இறந்து போனதாக நேற்று செய்தி. மைக்கேல் தன்னை மிகவும் நேசித்த ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டவராய் இறந்து போனார். மேற்சொன்ன அதே கால கட்டத்தில் என்னைப் பாதித்த இசை ஆளுமையான ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கார் மேடையில் இப்படி சொன்னார். ' எனக்கு முன்னால் அன்பும் வெறுப்பும் இருந்தன. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்'. இதை எழுதிக்கொன்டிருக்கும்போது கும்பகோணத்தில் இருந்து கார்த்தி கூப்பிட்டான். மொபைலில் 'ஹில் தி வேர்ல்ட்' என்று மைக்கேல். செந்திலண்ணன் அந்த கேசட்டை வாங்கிப் போடாமல் இருந்திருக்கலாம்.


Thursday, April 2, 2009

இலங்கைப் போரின் பயங்கரம் - அருந்ததி ராய்

சிறீலங்காவில் தற்பொழுது கட்டவிழும் பயங்கரத்திற்கான காரணம் அதைச் சூழ்ந்திருக்கும் மௌனமே. அங்கே நடப்பவை பற்றிய பதிவுகள் இந்திய வெகுஜன ஊடகங்களிலோ சர்வதேச ஊடகங்களிலோ கிட்டதட்ட இல்லை எனலாம். இது ஏன் இப்படி இருக்கிறது என்பது தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.


கிடைக்கும் சிறு தகவல்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால் பயங்கரவாதத்திற்க்கு எதிரான போர் என்ற காரணப் போர்வை கொண்டு சிறீலங்கா அரசு அங்கிருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தை நசுக்கவும் தமிழர்களின் மீது சொல்லொண்ணா குற்றங்களைப் புரியவும் செய்கிறது. ஒவ்வொரு தமிழனும் தீவிரவாதி எனும் கொள்கை அடிப்படையில் மக்கள் வாழ்விடங்கள், மருத்துவமனைகள் மற்றும் முகாம்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டு போர்க்களமாகியுள்ளன. நம்பத்தகுந்த கணக்குகள் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டும் எங்கின்றன. டாங்கிகளையும் வான்படையையும் கொண்டு சிறீலங்கா ராணுவம் வேகமாக முன்னேறுகிறது. அதே வேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழர்களைத் தங்கவைக்க பல "நல்வாழ்வு கிராமங்கள்" அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தி டெய்லி டெலிகிராப் (பிப்ரவரி 14, 2009) செய்தியின்படி, " இந்த கிராமங்கள் போரிலிருந்து தப்பி வரும் அனைவரும் கட்டாயமாகத் தேக்கி வைக்கப்படும் மையங்களாக இருக்கும்". இது வதை முகாம்களின் மறு வடிவமா?


சிறீலங்காவின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி மங்கல சமரவீரா தி டெய்லி டெலிகிராபிற்க்கு கூறுகிறார்:” சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் கொழும்பில் உள்ள தமிழர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி அவர்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தது. 1930களில் நாஜிக்கள் செய்தது போல இது வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும். உண்மையில் அவர்கள் மொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாக மாறக்கூடிய சாத்தியமுள்ளவர்களாக முத்திரை குத்தப் ". குடிமக்கள் மற்றும் "தீவிரவாதிகளின்" கொடும் வீழ்ச்சியில் காணப்படும் குறிப்பு, சிறீலங்கா அரசு புலிகளை அழிக்கும் சாக்கில் ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்துவதில் முடியுமென்பதாகவே உள்ளது. ஐ.நா.வின் கணக்குப்படி பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமுற்றிருக்கின்றனர். சில நேரடி சாட்சிகளின் விவரணைகளோஒரு நரகத்தின் கொடுங்கனவாக உள்ளன. சிறீலங்காவில் நாம் காண்பது என்னவென்றால் பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அடாவடியான இன அழிப்பு போரே. தண்டிப்பாரின்றி சிறீலங்கா அரசாங்கம் இக்குற்றங்களைப் புரிவது உண்மையில் அதன் முன் தீர்மானமுள்ள உள்ளார்ந்த இன வெறியையே வெளிக்ககாட்டுகிறது. அதுவே அந்நாட்டில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதற்க்கும் அன்னியமாக்கப்பட்டதற்க்கும் இட்டுச் சென்றது. சமூகத் தடை, பொருளாதாரத் தடை, இன வெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள் என இன வெறி வரலாறு நீண்டுள்ளது. முதலில் அகிம்சை வழிப் போராட்டத்தில் ஆரம்பித்த, தலைமுறைகளாக நீளும் இந்த குரூரமான உரிமைப் போரின் வேர் அங்கேயே உள்ளது.

ஏன் இந்த மவுனம்? மற்றொரு பேட்டியில் சமரவீர, "சுதந்திரமான ஊடகச் செயல்பாடுகள் இன்றைக்கு சிறீலங்காவில் இல்லவே இல்லை" என்கிறார். மக்களை 'பயத்தில் உறைய வைக்கும்' மரணப்படைக்குழுக்களையும் வெள்ளை வேன் கடத்தல்களையும் பற்றி சமரவீர சொல்லிக்கொண்டே போகிறார். மாற்றுக் கருத்துக்களைப் பேசுவோர், பல பத்திரிக்கையாளர்களையும் சேர்த்து, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். பயங்கரவாத தடுப்புச்சட்டங்கள், மறைந்து போதல்கள் மற்றும் படுகொலைகள் போன்ற செயல்களின் மூலம் பத்திரிக்கையாளர்களை அடக்குவதாக சிறீலங்கா அரசை சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. சிறீலங்காவின் இந்த மனித நேயத்திற்க்கு எதிரான குற்றத்திற்க்கு உதவியாக இந்தியா தளவாடங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு உதவிகளைச் செய்வதாக சங்கடமேற்ப்படுத்தக்கூடிய ஆனால் உறுதிப்படாத செய்திகள் சொல்கின்றன. இது உண்மையானால் மிகவும் கொடுமையானது. பிற அரசாங்கங்கள் என்னவாயின? பாகிஸ்தான்? சீனா? இந்தச் சூழலுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ அவர்கள் என்ன செய்கிறார்கள்?

சிறீலங்காவில் நடக்கும் போர் காரணமாக தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துள்ளனர். பொதுமக்களின் கோபமும் வலியும்,பெருமளவில் உண்மையானதும், கொஞ்சம் அரசியல் சதிராட்டங்களிலாளானதும், தேர்தல் பிரச்சினையாக முன்வைக்கப் படுகிறது. இப்பிரச்சினை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சென்றடையாமல் இருப்பது அசாதாரணமானது. ஏன் இங்கே இந்த மவுனம்? இங்கே 'வெள்ளை வேன் கடத்தல்கள்' - இந்த பிரச்சினை சம்பந்தமாவது - இல்லை. சிறீலங்காவில் என்ன நடக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் இந்த மவுனம் மன்னிக்க முடியாதது. முதலில் ஒரு பக்கம் சார்ந்தும், பிறகு மறுபக்கம் சார்ந்தும், இப்பிரச்சினையில் பொறுப்பற்ற செயல்பாடுகளை மேற்கொண்ட இந்திய அரசாங்கத்தின் நீண்ட வரலாறு அதை மேலும் உறுதிப் படுத்துகிறது.இதைப் பற்றி முன்பே பேசியிருக்கக்கூடிய என்னைப் போன்ற பலர், அதை செய்யாமலிருந்ததற்க்கு காரணம் போதுமான தகவல்கள் இல்லாமையே.ஆகப் படுகொலைகள் தொடருகையில், பல்லயிரக்கணக்கானோர் வதை முகாம்களில் அடைக்கப்படுகையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பசியால் வாடுகையில், ஒரு பெரும் இனப்படுகொலை நிகழவிருக்கையில், இந்த மாபெரும் தேசம் மவுனம் காக்கிறது. இது ஒரு மாபெரும் மானுடப் பேரழிவு. உலகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமிது. காலம் கடந்து விடும் முன்.