Wednesday, September 5, 2012

ஒரு வார்த்தை

த்தனை காலமாக 
நான் இதைச் சிந்தித்ததில்லை.
வார்த்தைகள் போதாமல் இருப்பதை.
எப்போதுமே நிகழும் ஒரு நிகழ்வினை 
குறிக்கக் கூட தோதான ஒரு வார்த்தை
இல்லாமலிருப்பதை.
இராணுவச் சங்கேத வார்த்தை போல 
கேட்பவர் சட்டென்று புரிந்து கொள்ள ஏதுவாக
சொல்பவர் அந்தக் கணத்தை உடனே கடக்கத் தோதாக
வார்த்தைகளைச் செய்யலாம்.
எடுத்துக்காட்டாக
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் மனைவியிடம் 
குழந்தை இறந்தே பிறந்ததைச் சொல்ல 
ஒரு வார்த்தையை. 

Sunday, July 22, 2012

ஒரு மொழியின் இறுதிச்சடங்கு


Sukurthang Saimar, the oldest of the Saimar-speaking four, being felicitated at the 44th Foundation Day of the Central Institute of Indian Languages, Mysore, by its Director S. N. Barman on Tuesday. Looking on (from right) are Sahitya Akademi Secretary Agrahara Krishnamurthy, and former CIIL Directors O. N. Koul, Rajesh Sachdeva and D. P. Patnayak. Photo: M.A. Sriram
Sukurthang Saimar, the oldest of the Saimar-speaking four, being felicitated at the 44th Foundation Day of the Central Institute of Indian Languages, Mysore, by its Director S. N. Barman on Tuesday. Looking on (from right) are Sahitya Akademi Secretary Agrahara Krishnamurthy, and former CIIL Directors O. N. Koul, Rajesh Sachdeva and D. P. Patnayak.
-The Hindu

சுகுர்தங் சைமார்
CIIL ன் பெரிய மனிதர்கள் சூழ அமர்ந்திருக்கிறார்.
சலனமற்ற அவர் முகம்
எதையும் காட்டுவது போலில்லை.

கிட்டத்தட்ட சவக்களை.

ஒரு மொழியின் இறுதிச்சடங்கில்
அது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

வெண்பட்டில் ஒரு தலைக்கிரீடமும்
ஒரு சால்வையும் போர்த்தப்படுகிறது.

சால்வை ஒரு செத்த பாம்பு போல
அவர் தோளில் கிடக்கிறது.
ஆனாலும் இன்றிரவுக் குளிருக்கு
அவர் அதைப் போர்த்திக்கொள்ளலாம்.
  


Tuesday, January 3, 2012

பார்த்தது, கேட்டது, படித்தது! - 2011

பார்த்தது (நினைவில் பதிந்தவை மட்டும்)
  1. ஆடுகளம் - மனித மனத்தின் சிடுக்குகளை மிக நுணுக்கமாக சித்தரித்த படம். சேவல் சண்டைக் களத்தில் இறுதி வெற்றி கறுப்புக்குக் கிடைக்கும் வரை பேட்டைக்காரனின் உணர்வுகள் கொந்தளிக்கும் தருணம், தோல்வி உருவாக்கும் தனிமையின் உக்கிரம் போன்றவை தமிழ் சினிமா இதுவரை கொடுத்தவற்றிலிருந்து மாறுபட்டதாக இருந்தது.
  2. மயக்கம் என்ன 
  3. யுத்தம் செய் - லேசான சோகம் இழையோடும் விறுவிறுப்பான த்ரில்லர் 
  4. ஹாரி பாட்டரும் உயிர் ரகசியமும் -2 - முதல் ஹாரி பாட்டர் படமான Harry Potter and the Sorcerer's Stone 2001 ல் வெளியானபோது கரூரில் ஒரு தியேட்டரில் நள்ளிரவுக் காட்சி பார்த்தேன். அதற்கு முன்பே Harry Potter and the  Goblet  of  Fire படித்திருந்தேன் (வரிசையில் நாலாவது). கரு தெரிந்திருந்ததால் ஒன்ற முடிந்தது. இப்போது பார்க்கையில் ஹாரி பாட்டரும், ஹெர்மையானி கிரேஞ்சரும், ரான் வீஸ்லியும் கடந்த பத்து வருடங்களாய் என்னுடனேயே வளர்ந்திருக்கிறார்கள். அந்தப் பெண் (எம்மா வாட்சன்) முதல் படத்தில் ஒரு சிறு பெண்ணாய் இருந்து இப்போது பதின்ம வயதுக் குமரியாய் வளர்ந்து நிற்கிறாள். உங்களுடனேயே வளர்ந்தவர்களை எப்படிப் பிடிக்காமல் போகும்?
  5. Rise of the Planet of the Apes - அடர்ந்த காட்டில் ஒரு உயர்ந்த மரத்தில் தாவி ஏறி இதுதான் எனது இடம் என்று சீசர் சொல்லும்போது நீங்கள் மறுக்க முடியாது.
  6. Warrior (2011) - தந்தை, சகோதரர்களுக்கு இடையே ஆன பிரச்சினையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தரப்பு. மகன் விளையாடிக் கொண்டிருக்கையில் வந்து பேசும் தந்தையின் முகத்தில் அவன் காசுகளை விசிறி அடிக்கிறான். அந்த ஒரு கணம் தந்தை கூசிப் போகிறான். Jeff Bridges முகத்தில் தெரிகின்றன அவமானத்தின் நுட்பமான உணர்வுகள்.
  7. Margin Call (2011) - வேலைக்குப் புதிதாகச் சேர்ந்திருக்கும் ராக்கெட் சயின்ஸ் படித்த அனலிஸ்ட்டிடம் பாஸ் கேட்கிறார், 'இந்த வேலைக்கு ஏன் வந்த?' பணம் என்கிறான் அவன். ஒரு முதலீட்டு வங்கியின் (Investment Bank ) ரிஸ்க் நிலை படு மோசமாயிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படும் போது நிறுவனத்தின் பல்வேறு தரப்புகளும் முட்டி மோதுகின்றன. 2008 நிதிப் பிரச்சினைக்கு முந்திய நிலையை படம் பிடிக்கிறது. 
  8. Drive (2011) - படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பல்வேறு பிரச்சினைகளின் ஊடாக நாயகனுடன் அவனது காரிலேயே பயணம் செய்யலாம். எஞ்சின் உறுமலை உடம்பில் உணரலாம். அதிலும் போர்ட் Mustang உடன் கிறிஸ்லெர் 300 செய்யும் விரட்டல் அற்புதம். கார்கள் மனிதர்களின் ஆசைகளுக்கு உடன்படுகின்றன. உதவுகின்றன. அவர்களோடு சேர்ந்து பலியாகின்றன.
  9. Paul (2011) 
  10. Super 8 (2011) - ஆரம்பக் காட்சிகள் ஸ்பீல்பெர்கின் ET யை ஞாபகப் படுத்துகின்றன. 
  11. Wall Street - Money Never Sleeps (2010) - இன்வெஸ்ட்மென்ட் பாங் காரர்கள் US  பெடரல் அதிகாரிகளோடு பேசும் காட்சியைப் பாருங்கள்.
  12. The Social Network - பேஸ் புக் தோன்றிய ஆரம்ப நாட்களில் மார்க் சக்கர்பெர்கின் வாழ்க்கை.
  13. The Adjustment Bureau (2011)  
  14. Rango (2011) - ஜானி டெப்பின் குரலில் ராங்கோ ஒரு நல்ல அனிமேஷன் படம்.  
  15. Nirvana Unplugged (1993 ) - பெப்சி இந்தியாவில் சந்தையைப் பிடித்த ஆரம்ப நாட்களில் (எனது பள்ளி நாட்கள்) பெப்சி பீட் என்று ஒரு பாப் இசைக் கேசட் வெளியிட்டார்கள். குறித்த எண்ணிக்கை பெப்சி மூடிகளைக் கொடுத்தால் கிடைக்கும். அதில் தான் நிர்வானாவின் 'Come  as you are' என்ற பாடலை முதலில் கேட்டது. புகழின் உச்சியில் இருக்கையிலேயே இறந்து போன கர்ட் கொபைனின் (Kurt Cobain) பாசாங்குகளையும் மேதமையையும் இதில் காணலாம். DVD வீடியோவில் நல்ல ஸ்பீக்கர் உதவியோடு கண்டு களியுங்கள்.
  16. Top Gear - Soul Cars 2011 - கார் பிரியர்களுக்கு.  
  17. Freakonomics (2010 ) - டாகுமெண்டரி - புத்தகம் படிக்காதவர்களுக்கு எளிதான படம். ரவுடி பொருளாதார நிபுணர் (அப்படித்தான் அழைக்கப்பட விரும்புகிறார் போல), ஸ்டீவென் லெவிட் தானே வருகிறார். பெயர் வைப்பது வாழ்க்கையின் வெற்றிக்கு எவ்வளவு உதவுகிறது என்பதைப் பற்றிய பகுதியை நீங்கள் வடமொழிப் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டும் தமிழர்களோடு பொருத்திப் பார்க்கலாம். இதில் வரும் ஹார்வர்டு பேராசிரியர் செந்தில் முல்லைநாதனை 'முல்லைநதான்' என்று உச்சரிக்கிறார்கள்.
கேட்டது 
  1. வெண்ணிற இரவுகள் - யுவன் ஷங்கர் ராஜா - ஆஹா 
  2. விளையாடு மங்காத்தா - யுவன் ஷங்கர் ராஜா 
  3. குதிக்கிற குதிரகுட்டி - இளையராஜா - எனது பிள்ளைக்குப் பிடித்தது 
  4. ஓட ஓடத் தூரம் கொறையல - தனுஷ் 
  5. My Dark Twisted Fantasy - Kanye West - ஹிப் ஹாப் ஆல்பம்.       
  6. King of Limbs - Radiohead - ரேடியோ ஹெட் இன் புதிய ஆல்பம். பாடல் வரியெல்லாம் பற்றிக் கவலைப் படவேண்டாம். தனித்துவமான சத்தம் இவர்களுடையது. தாம் யோர்க்கின் குரலும் இசையும் நம்மைக் கூட்டிச் செல்லும் இடத்திற்கு தயங்காமல் போகலாம். ஒப்புக்கொடுத்தால்.
  7. Viva la vida - Coldplay - பழைய ஆல்பம். 2009 என்று நினைக்கிறேன். இந்தப் பாடலைக் கேளுங்கள்.                                                                                                          
  8. Michael - Michael Jackson - மைக்கேல் இறந்த பிறகு கிடைத்த ட்ராக்குகளை வைத்து ஆல்பமாக வெளியிடப்பட்டது. மைக்கேலை நினைக்கையில் ஏற்படும் சோகத்தில் பாடல்களை பகுத்து ஆய மனம் விரும்பாது.
  9. Recovery - Eminem - ஆப்ரோ அமெரிக்கர்களின் ஆதிக்கம்  அதிகம் உள்ள தளத்தில் தனியான குரல். முதலில் கேட்டது சில வருடங்களுக்கு முன் Cleaning out  my Closet வீடியோ மூலம். பிறகு பல ஆல்பங்கள். 2010 ல் இது.                                                                  
  10. Kala - MIA - இலங்கைத் தமிழ்ப் பெண் மாதங்கி மாயா அருள்பிரகாசம் இலங்கைப் பிரச்சினையின் போது வெளியேறி சிறு வயதிலேயே வெளிநாட்டில் வளர்ந்தவர். கொஞ்ச நாள் சென்னையில் இருந்திருக்கிறார். இவரது தந்தை ஒரு இயக்கத்தில் இருந்திருக்கிறார். இவரது தாயின் பெயரே அல்பத்துக்கு. கலா. முதலில் கேட்டது ஸ்லம்டாக் மில்லியனர் பட இசைத் தொகுப்பில் உள்ள 'Paper Planes ' பாடலின் மூலம். Rollingstone பத்திரிகை கடந்த பத்தாண்டுகளில் வந்த சிறந்த நூறு ஆல்பங்களில் 9 வது இடத்தில் வைத்துள்ளது. Bamboo banga என்ற பாடலில் 'காட்டுக் குயிலு' (தளபதி) பாட்டின் மேளம் ஊடுருவுவதைக் கேளுங்கள். 
படித்தது 
  1. புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் - மதுரையின் வேசி தெருக்களிளிருந்து பினாங்கு, மலேயா, இந்தோனேசியா என்று பலவாறான பயணம். சாகசம், இரண்டாம் உலகப் போர் கால கட்டப் பதிவு, கடல் தாண்டி திரவியம் தேடிய தமிழர் வாழ்வின் பக்கங்கள் என்று பன்முகமாக விரிகிறது நாவல். ப. சிங்காரம் மதுரை விளக்குத்தூண் நாடார் மேன்சனில் தான் இருந்திருக்கிறார். தனது வாழ்நாள் சேமிப்பை நாடார் மகாஜன சங்கத்திற்கு கொடுத்திருக்கிறார். தனது சாவை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று சொல்லி 1997 ல் இறந்து போனார். முன்பே படித்திருந்தால் தத்தநேரிச் சுடுகாட்டிற்கு எடுத்துப் போகையில் ஒரு கை பிடித்திருக்கலாம்.
  2. மெய்யுள் - மு. தளையசிங்கம் - 'இனிமேல் எல்லாத் தொழில்களுமே கலையாகவும் யோகமாகவும் தொழுகையாகவும் இருக்குமாறு செய்ய வேண்டும்.'
  3. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - பசியின் உக்கிரத்தில் நாத்ரே 'அமி கனார்' என்று அரற்றுகையில் உயிர் நடுங்குகிறது.
  4. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - சாரு நிவேதிதா
  5. ஊரின் மிக அழகான பெண் -  சாரு நிவேதிதா - மொழி பெயர்ப்புச் சிறுகதைகள். சாள்ஸ் பூகாவ்ஸ்கியின் சிறுகதை அவரது கவிதையை நினைவுறுத்தும்.
  6. தாந்தேயின் சிறுத்தை -  சாரு நிவேதிதா
  7. ஜீரோ டிகிரி -  சாரு நிவேதிதா
  8. தேகம் -  சாரு நிவேதிதா
  9. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா - 1965 லிருந்து என்று நினைக்கிறேன். அதிலிருந்து சில பத்தாண்டுகள் தமிழின் முக்கிய கலை இலக்கியப் போக்குகளை பதிவு செய்திருக்கிறார். ஆனந்த விகடனில் எழுதிய 'கற்றதும் பெற்றதும்' க்கு முன்னோடி. 
  10. வாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன் - அனுபவங்கள்.
  11. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன் 
  12. கம்யூனிசம் - இரா. ஜவஹர் - விக்கிப்பீடியா எழுத்தாளர்களைப் போல அல்லாமல் நேரடியாகக் களத்தில் இருந்த, மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவரின் எளிமையான அறிமுகம்.
  13. Dilbert Principle - Scott Adams - மென்பொருள்  துறையில் பணிபுரியும் நண்பர்களது வாழ்வை ஓரளவு புரிந்து கொள்ள உதவுகிறது. அவர்கள் நம்மிடம் சொல்லாததும் காணக்கிடைக்கிறது. உண்மைச் சம்பவங்கள் அவருடைய கார்ட்டூன்களை விட விநோதமானவை என்று ஸ்காட் சொல்கிறார்.
  14. Dilbert Future - Scott Adams
  15. The High Performance Entrepreneur - Subrato Bagchi
  16. DeNiro's Game  - Rawi Hage
  17. Connected - Daniel Altman
   வலைதளங்கள் 
  1. http://www.banksy.co.uk 
  2. http://azhiyasudargal.blogspot.com  - தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் சிறந்த ஆக்கங்களின் தொகுப்பு. புதையல் மாதிரி.
  3. http://www.thiraipaadal.com/ - சென்னையிலிருந்து மதுரை வழி மோட்டலில் கேட்ட இளையராஜாவின், 'நான் யாரு, எனக்கேதும் தெரியலையே', என்ற பாடலைத் தேடியதில் கிடைத்த தளம். 
  4. http://www.storytimeforme.com/ - குழந்தைகளுக்குச் சொல்ல பாட்டிகளுக்கு கதையேதும் இல்லாததால், குழந்தை பாட்டியோடு சீரியல் பார்க்காமலிருக்க, பிள்ளைக்காக.
  5. http://www.project-syndicate.org/ - உலகப் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள்.
  6. http://www.psykopaint.com/ - பெயின்டையும் பேப்பரையும் வீணாக்க விரும்பாதவர்களுக்கு.
  7. http://siddhavaithiyan.blogspot.com/
  8. http://gapingvoid.com/