காட்டில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் போர், இந்தியா பெருமையும் வெட்கமும் ஒருங்கே அடையும் போர். "ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட்" அறிவிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் உள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சர், ப.சிதம்பரம் ( போரின் சி.ஈ.ஒ.), அப்படியொன்று இல்லையென்றும் ஊடகங்களின் பரப்புரைதான் என்றும் சொல்கிறார். ஆனாலும் குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கப்பட்டும் துருப்புகள் களமிறக்கப்பட்டும் உள்ளனர். அரங்கம் மத்திய இந்தியாவின் காடுகளில் இருந்தாலும் நம் எல்லோருக்கும் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு பக்கம் பணம், ஆயுதங்கள், ஊடகங்கள் மற்றும் வளரும் வல்லரசின் ஆதரவுள்ள பெரும் துணை ராணுவம். மற்றாரு பக்கம் அருமையாகக் கட்டமைக்கப்பட்ட, அசாதாரணமான, ஆயுதப்போராட்ட வன்முறை வரலாறு கொண்ட, பெரும் ஊக்கத்தோடு செயல்படும் மாவோயிஸ்ட் கெரில்லாக்களின் ஆதரவுடன் நிற்கும் மரபான ஆயுதங்கள் தரித்த கிராமத்தவர்கள். ஒவ்வொரு தடவையும் மாவோயிஸ்டுகள் (அல்லது அவர்களது முந்தைய அவதாரங்கள்) தோற்க்கடிக்கப்பட்டது மட்டுமல்லாது முற்றிலும் ஒடுக்கப்பட்டதுபோல் காணப்பட்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் முன்பை விட அதிக ஒருங்கிணைப்புடனும் அதிக உறுதியுடனும் அதிக ஆளுமையுடனும் உயிர்த்து எழுந்துள்ளனர். லட்சக்கணக்கான பூர்வகுடி மக்களின் தாயகமான, கார்ப்பரேட் உலகின் கனவுலகமான சட்டிஸ்கர், ஜார்க்கன்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தின் தாது வளமிக்க காடுகளில் இன்று மீண்டும் அந்த எழுச்சி பரவுகிறது. இந்திய சனநாயகத்தின் ஒழுக்க அடிச்சரடான இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950 இல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பூர்வகுடி மக்களுக்கு அது ஒரு துயரமான நாள். காலனியக் கொள்கைகளைப் பின்பற்றிய அரசியலமைப்புச் சட்டம், பூர்வகுடிகளின் தாயகத்திற்கு அரசைப் பொறுப்பாக்கியது. இது, ஒரே இரவில் மொத்த பூர்வகுடிமக்களையும் அவர்களது சொந்த மண்ணிலேயே நிலவுரிமை அற்றவர்களாக்கியது. கடந்த ஐந்தாண்டுகளில் இரும்பாலைகள், இரும்புத்தொழிற்ச்சாலைகள், மின்சார நிலையங்கள், அலுமினியச் சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக, பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, மிக ரகசியமாக, சட்டீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கன்ட் மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுடன் கைச்சாத்திட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பணமாக உருமாற பூர்வகுடிகள் அகற்றப்பட வேண்டும். அதனாலேயே இந்தப் போர்.மாவோயிஸ்ட் இயக்கத்தின் 'தலையை எடுப்பதற்காக' இந்தியப் போலீஸ் உயரதிகாரிகளுக்கு 'குறி வைத்துப் படுகொலை செய்யும்' தொழில்நுட்பத்தை இஸ்ரேலின் மொசாத் கற்றுக்கொடுப்பதாக ஒரு இணையக் கட்டுரை சொல்கிறது. இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட புதிய தளவாடங்களைப்பற்றி பத்திரிகைகளில் பேச்சடிபடுகிறது - லேசர் ரேஞ் பைண்டர்ஸ், தெர்மல் இமேஜிங் எக்விப்மென்ட் (இருட்டில் உருவங்களைக் கண்டறியும் கருவி), மற்றும் அமெரிக்க ராணுவத்தின் பிரபலமான ஆளில்லா விமானங்கள் போன்றவை. ஏழைகளுக்கு எதிராகப் பிரயோகிக்கச் சிறந்த ஆயுதங்கள்.
No comments:
Post a Comment