2008 இல் எனது நிறுவனச் செலவுகள் மாதம் இரண்டு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பங்கு வணிகப் பரிவர்த்தனைகள் சுத்தமாகக் குறைந்தது. கமாடிட்டீஸ் (பண்டகச் சந்தை) ஓரளவு கைகொடுத்தது.மார்கெடிங் மேனேஜர்களை இறுக்கிப்பிடித்தும் பயனில்லை. வருட இறுதியில் செலவுகளைக் குறைக்க பயனில்லாப் பணியாளர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம். மொத்த செலவில் தோராயமாக ஐம்பது சதவிகிதம் சம்பளமே. 2009 ஆரம்பத்தில் சுத்தமாய் மெலிந்து இருந்தது கம்பெனி. க்ளையெண்டுகள் ஓரளவு தக்கவைக்கப்பட்ட நிலையில் 2008 வணிகத்தைச் செய்தாலே லாபம்தான். தற்போதைய கட்டமைப்பிலேயே அதைச் செய்யவும் முடியும். இருக்கிறவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
இதே காலகட்டத்தில் பங்குச் சந்தை நன்கு மேலேறியுள்ளது (2007 இறுதியில் முதலீடு செய்தவர்கள் பொறுமை). டோ ஜோன்ஸ் மற்றும் பல இண்டக்ஸகளும் முன்னேறியிருக்கின்றன. இதற்கு காரணமாக பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் எதிர்பாராத லாபம். ரிசஷன் என்று சொல்லிக்கிட்டு எப்பிடி லாபம் கொழிக்குது? இந்த நிறுவனங்களின் எதிர்பாராத (?!) லாபத்துக்குக் காரணம் அவை கடந்த வருடம் செய்த ஆட்குறைப்பும் செலவுக்கட்டுப்பாடும் தான். படத்தைப் பாருங்கள்.
ரிசஷன் ஆரம்பித்த 2007 டிசம்பரிலிருந்து 65 லட்சம் வேலைகள் காலி. முந்தைய ரிசசன்களுக்குப் பிந்திய காலத்தில் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை தள்ளிப் போடவே செய்தன. இருப்பவர்களை வைத்து வேலை வாங்கின. இப்போது பொருளாதாரம் திரும்புவது போல் தோன்றினாலும் வேலையிழந்தோர் எண்ணிக்கை முன்பை விட அதிகம். ஆட்குறைப்பு மிகத் துரிதமாக நடந்தது. தேவையும் உற்பத்தியும் பரவாயில்லை என்கிற செய்திகள் வந்தாலும் உண்மையில் அதிகரிக்கும் வேலையிழப்பு இந்த ரிசசனை முந்தையவற்றிலிருந்து ஆழமானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது.