இத்தனை காலமாக
நான் இதைச் சிந்தித்ததில்லை.
வார்த்தைகள் போதாமல் இருப்பதை.
எப்போதுமே நிகழும் ஒரு நிகழ்வினை
குறிக்கக் கூட தோதான ஒரு வார்த்தை
இல்லாமலிருப்பதை.
இராணுவச் சங்கேத வார்த்தை போல
கேட்பவர் சட்டென்று புரிந்து கொள்ள ஏதுவாக
சொல்பவர் அந்தக் கணத்தை உடனே கடக்கத் தோதாக
வார்த்தைகளைச் செய்யலாம்.
எடுத்துக்காட்டாக
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் மனைவியிடம்
குழந்தை இறந்தே பிறந்ததைச் சொல்ல
ஒரு வார்த்தையை.