Thursday, April 2, 2009

இலங்கைப் போரின் பயங்கரம் - அருந்ததி ராய்

சிறீலங்காவில் தற்பொழுது கட்டவிழும் பயங்கரத்திற்கான காரணம் அதைச் சூழ்ந்திருக்கும் மௌனமே. அங்கே நடப்பவை பற்றிய பதிவுகள் இந்திய வெகுஜன ஊடகங்களிலோ சர்வதேச ஊடகங்களிலோ கிட்டதட்ட இல்லை எனலாம். இது ஏன் இப்படி இருக்கிறது என்பது தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.


கிடைக்கும் சிறு தகவல்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால் பயங்கரவாதத்திற்க்கு எதிரான போர் என்ற காரணப் போர்வை கொண்டு சிறீலங்கா அரசு அங்கிருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தை நசுக்கவும் தமிழர்களின் மீது சொல்லொண்ணா குற்றங்களைப் புரியவும் செய்கிறது. ஒவ்வொரு தமிழனும் தீவிரவாதி எனும் கொள்கை அடிப்படையில் மக்கள் வாழ்விடங்கள், மருத்துவமனைகள் மற்றும் முகாம்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டு போர்க்களமாகியுள்ளன. நம்பத்தகுந்த கணக்குகள் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டும் எங்கின்றன. டாங்கிகளையும் வான்படையையும் கொண்டு சிறீலங்கா ராணுவம் வேகமாக முன்னேறுகிறது. அதே வேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழர்களைத் தங்கவைக்க பல "நல்வாழ்வு கிராமங்கள்" அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தி டெய்லி டெலிகிராப் (பிப்ரவரி 14, 2009) செய்தியின்படி, " இந்த கிராமங்கள் போரிலிருந்து தப்பி வரும் அனைவரும் கட்டாயமாகத் தேக்கி வைக்கப்படும் மையங்களாக இருக்கும்". இது வதை முகாம்களின் மறு வடிவமா?


சிறீலங்காவின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி மங்கல சமரவீரா தி டெய்லி டெலிகிராபிற்க்கு கூறுகிறார்:” சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் கொழும்பில் உள்ள தமிழர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி அவர்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தது. 1930களில் நாஜிக்கள் செய்தது போல இது வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும். உண்மையில் அவர்கள் மொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாக மாறக்கூடிய சாத்தியமுள்ளவர்களாக முத்திரை குத்தப் ". குடிமக்கள் மற்றும் "தீவிரவாதிகளின்" கொடும் வீழ்ச்சியில் காணப்படும் குறிப்பு, சிறீலங்கா அரசு புலிகளை அழிக்கும் சாக்கில் ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்துவதில் முடியுமென்பதாகவே உள்ளது. ஐ.நா.வின் கணக்குப்படி பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமுற்றிருக்கின்றனர். சில நேரடி சாட்சிகளின் விவரணைகளோஒரு நரகத்தின் கொடுங்கனவாக உள்ளன. சிறீலங்காவில் நாம் காண்பது என்னவென்றால் பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அடாவடியான இன அழிப்பு போரே. தண்டிப்பாரின்றி சிறீலங்கா அரசாங்கம் இக்குற்றங்களைப் புரிவது உண்மையில் அதன் முன் தீர்மானமுள்ள உள்ளார்ந்த இன வெறியையே வெளிக்ககாட்டுகிறது. அதுவே அந்நாட்டில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதற்க்கும் அன்னியமாக்கப்பட்டதற்க்கும் இட்டுச் சென்றது. சமூகத் தடை, பொருளாதாரத் தடை, இன வெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள் என இன வெறி வரலாறு நீண்டுள்ளது. முதலில் அகிம்சை வழிப் போராட்டத்தில் ஆரம்பித்த, தலைமுறைகளாக நீளும் இந்த குரூரமான உரிமைப் போரின் வேர் அங்கேயே உள்ளது.

ஏன் இந்த மவுனம்? மற்றொரு பேட்டியில் சமரவீர, "சுதந்திரமான ஊடகச் செயல்பாடுகள் இன்றைக்கு சிறீலங்காவில் இல்லவே இல்லை" என்கிறார். மக்களை 'பயத்தில் உறைய வைக்கும்' மரணப்படைக்குழுக்களையும் வெள்ளை வேன் கடத்தல்களையும் பற்றி சமரவீர சொல்லிக்கொண்டே போகிறார். மாற்றுக் கருத்துக்களைப் பேசுவோர், பல பத்திரிக்கையாளர்களையும் சேர்த்து, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். பயங்கரவாத தடுப்புச்சட்டங்கள், மறைந்து போதல்கள் மற்றும் படுகொலைகள் போன்ற செயல்களின் மூலம் பத்திரிக்கையாளர்களை அடக்குவதாக சிறீலங்கா அரசை சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. சிறீலங்காவின் இந்த மனித நேயத்திற்க்கு எதிரான குற்றத்திற்க்கு உதவியாக இந்தியா தளவாடங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு உதவிகளைச் செய்வதாக சங்கடமேற்ப்படுத்தக்கூடிய ஆனால் உறுதிப்படாத செய்திகள் சொல்கின்றன. இது உண்மையானால் மிகவும் கொடுமையானது. பிற அரசாங்கங்கள் என்னவாயின? பாகிஸ்தான்? சீனா? இந்தச் சூழலுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ அவர்கள் என்ன செய்கிறார்கள்?

சிறீலங்காவில் நடக்கும் போர் காரணமாக தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துள்ளனர். பொதுமக்களின் கோபமும் வலியும்,பெருமளவில் உண்மையானதும், கொஞ்சம் அரசியல் சதிராட்டங்களிலாளானதும், தேர்தல் பிரச்சினையாக முன்வைக்கப் படுகிறது. இப்பிரச்சினை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சென்றடையாமல் இருப்பது அசாதாரணமானது. ஏன் இங்கே இந்த மவுனம்? இங்கே 'வெள்ளை வேன் கடத்தல்கள்' - இந்த பிரச்சினை சம்பந்தமாவது - இல்லை. சிறீலங்காவில் என்ன நடக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் இந்த மவுனம் மன்னிக்க முடியாதது. முதலில் ஒரு பக்கம் சார்ந்தும், பிறகு மறுபக்கம் சார்ந்தும், இப்பிரச்சினையில் பொறுப்பற்ற செயல்பாடுகளை மேற்கொண்ட இந்திய அரசாங்கத்தின் நீண்ட வரலாறு அதை மேலும் உறுதிப் படுத்துகிறது.இதைப் பற்றி முன்பே பேசியிருக்கக்கூடிய என்னைப் போன்ற பலர், அதை செய்யாமலிருந்ததற்க்கு காரணம் போதுமான தகவல்கள் இல்லாமையே.ஆகப் படுகொலைகள் தொடருகையில், பல்லயிரக்கணக்கானோர் வதை முகாம்களில் அடைக்கப்படுகையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பசியால் வாடுகையில், ஒரு பெரும் இனப்படுகொலை நிகழவிருக்கையில், இந்த மாபெரும் தேசம் மவுனம் காக்கிறது. இது ஒரு மாபெரும் மானுடப் பேரழிவு. உலகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமிது. காலம் கடந்து விடும் முன்.