Tuesday, February 1, 2011

சாவு நேர மொபைல் அழைப்புகள்

        கார்த்தி வீட்டு முற்றத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். நானும் கார்த்தியும். உள்ளே 'ஓம்சக்தி' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பெருங்குரலெடுத்து கத்தினார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது கார்த்தியின் அப்பா விக்கென்று எம்பி அடங்கினார். எல்லோரும் கதற கார்த்தி நாடி பார்த்தான்.
'வரதா நாடி பாரு'
கையைப் பிடித்தேன். ஒன்றும் சொல்லமுடியவில்லை. எல்லோரும் செய்தியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. நீண்ட பெரும் வாதையிலிருந்து அவர் விடுதலை அடைந்த செய்தியை.
           வெளியே வந்து நின்றேன். யாருக்கெல்லாம் சொல்வது. மரணத்தை அறிவிப்பது பெரிய துன்பம். முதலில் கார்த்திக்கும் எனக்கும் பொதுவான நண்பர்களின் பட்டியல். ஜெயகார்த்தி, பாலா, லயனல், முத்து, சூர்யா, ஹோமேஷ். . . . . . . . . . ..
 'டேய், கார்த்தி அப்பா இறந்துட்டாரு'.
'எப்ப?'
'இப்பதான்'
'எப்பிடி?'
 விஷயம் தெரியாதவர்களுக்கு சுருக்கமாகவும் தெரிந்தவர்களுக்கு தகவலையும் சொன்னேன்.
மறுநாள் இடுகாட்டில் கார்த்தி கூப்பிட்டான்.
'டே, வி பி வந்துக்கிட்டிருக்காரு. அவர்ட்ட எங்க வரன்னு சொல்லிருடா.'
பிறகு கால்.
'வரதன் எங்க இருக்கீங்க?'
'சுடுகாட்டுல சார். நீங்க வர எவ்வளவு நேரமாகும்?'
'அரைமணி நேரமாகும்?'
'அப்ப இங்க காரியம் முடிஞ்சிரும். நீங்க நேரா கார்த்தி வீட்டுக்குப் போயிருங்க.'

      பாலா ஒருநாள் காலை நான் அலுவலகத்திலிருந்த போது கூப்பிட்டான்.
'வரதா அம்மா இறந்துட்டாங்கடா'
குரலின் அடர்த்தி குறைந்திருந்தது. அழுதுகொண்டிருக்கிறான்.
'வர்றேன் பாலா'
மீண்டும் பட்டியல். ஜெய், அலீம், ஹோமேஷ், முத்து . . . . .. . . .. . . .. .

     ண்பர் கோபி சில வருடங்களுக்கு முன்பு ஒருநாள் மொபைலில் கூப்பிட்டார்.
'வரதா அம்மா இறந்துட்டாங்க'
'என்னாச்சு கோபி திடீர்னு ?'
மௌனம். 
'எங்க இருக்கீங்க?'
' கார்ல கொண்டுபோயிட்டிருக்கோம்'
இறப்பின் துயரத்திலிருந்து ஒருவரை தேற்றுவது தெரியவில்லை. குறிப்பாக மொபைலில். அதிலும் குறிப்பாக இறந்தவரோடு(?) காரில் பயணிக்கும் போது.

      திருமலையின் அம்மா நீண்ட காலமாக சிகிச்சையிலிருந்தார். கேன்சர் என்று நினைக்கிறேன். மதுரை மீனாக்ஷி மிஷனில் இறந்து போனார். திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்லும்போது கால் செய்தான். நான் யாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கவில்லை.

         சித்திக் இரண்டு வருடம் என்னுடன் திருவல்லிகேணியில் தங்கி வேலை தேடினான். சித்திக்கின் அப்பா நீண்ட நாள் சுகமில்லாமல் பின் இறந்தார். திருநெல்வேலி மேலப்பாளையத்தில். அதற்குப் பலவருடங்களுக்கு முன் அதே மேலப்பாளையத்தில் சித்திக் அண்ணன் திருமணத்திற்கு சென்றிருந்தோம் . இரண்டு நாட்கள் தாமிரபரணியில் சரியான கொண்டாட்டம்.
         சென்னையிலிருந்து மதுரை சென்று பின் திருநெல்வேலி செல்ல திட்டம். 2005 ஆக  இருக்கலாம். காலையில் விழிப்பு வந்தபோது பஸ் திருச்சி கூட தொடவில்லை. உளுந்தூர்பேட்டையைத் தாண்டி ஒரு ஊரில் நிற்கிறது. நூற்றுக்கணக்கில் வாகனங்கள் முன்னும் பின்னும். சிறிது தூரத்தில் சிறிய பாலம் உடைந்து வெள்ளம் ரோட்டில் ஓடியது. திருச்சி செல்லும் ரோடு துண்டிக்கப் பட்டிருந்தது. அந்த சிறிய ஊரே வாகனங்களால் நிரம்பியிருந்தது. எல்லோரும் காலைகடன் கழிக்க இடம் தேடினர். பின்னர் நேரம் செல்ல செல்ல இது டீதண்ணியோடு போகாது என்று உணவைத்தேடி அலைந்தனர். அவ்வளவு டிமாண்டை அந்த ஊரின் ஹோட்டல்கள் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பார்க்க முடியாது. நான் பிஸ்கட் டீயோடு முடித்துக்கொண்டேன். எல்லா வாகனங்களிலிருந்தும் பல கிமீ  தூரத்திலிருந்து நடந்து வந்து வெள்ளத்தைப் பார்த்துச் சென்றனர். பொழுது போக வேற வழி? எப்ப கிளம்புவோம்னே தெரியாதபோது.
         மொபைல் சார்ஜ் தீர்ந்துபோனது. முற்றிலும் தொடர்பற்ற நிலை. எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. வழமையான பயணத்தின் அலுப்பிலிருந்து மாறி அது சாகசமிக்க ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது. பிறகு பின் மதிய வேளையில் வாகனங்களை  வேறு வழியில் திருப்பி விட்டதில் இரவு ஏழெட்டு மணியளவில் சேலம் அடைந்தோம். முதல் நாளிரவு சாப்பாட்டுக்குப் பின் அங்கே தான் சாப்பிட்டேன். மறுநாள் காலையில் மதுரையில் குளித்து கிளம்பி திருநெல்வேலி. சித்திக்கிடம் அரைமணி தான் பேசியிருப்பேன். பிறகு மதுரை. இந்த மரணத்தை நான் யாருக்கும் தெரிவிக்க வேண்டியிருக்கவில்லை.

       பெரியம்மா மதுரையில் எனது வீட்டில் இறந்த போது நான் சென்னையில் இருந்தேன். இரவே கிளம்பினேன். மறுநாள் காலையில் எடுக்கிறார்கள். சோதனையாக பஸ் கொடூரமான ஸ்லோ. காலை ஆறு மணிக்குப் பின் தொடர்ச்சியாகக் கால்கள்.
'இப்ப எங்க இருக்க?'
'பஸ் துவரங்குறிச்சி தாண்டிரிச்சு'.
காலை பதினோரு மணியளவில் தான் போனேன். தெருவே காத்திருந்தது. துக்கத்தை விட காக்க வைத்த கூச்சமே அதிகம்.

       My father paased away.
சுதர்ஷன் SMS அனுப்பினான். உடனே பேசாமல்  இரண்டு நாள் கழித்து அழைத்தேன்.

      +2 தேர்வுக்குப் பின் லயனல் அப்பா இறந்து போனார். மொபைலோ டெலிபோனோ வீட்டில் இல்லாத காலத்தில் எப்படி பலர் அங்கே சேர்ந்தொம்னு தெரியல.

      2007 மே மாதம் இருள் பிரியாத அதிகாலையில் மொபைல் அலறியது.
ஈஸ்வரன் மாமா.
'வரதா, எல்லாரையும் கூட்டிட்டு அவனியாபுரம் வா'.
'என்னாச்சு?'
'அத்த தவறிட்டாங்க'
'யாரு பெரியம்மாவா?'
'இல்ல. சின்னத்த'

அந்த சொல்லுக்கும் மாலை கொள்ளி வைத்து விட்டு திரும்புவதற்கு இடையிலான சம்பவங்கள் மங்கலாகவே இருக்கிறது.

அம்மாவை நடுவீட்டில் சேரில் உட்கார்த்தியிருந்தார்கள்.

இடையில் லயனலோ யாரோ என்னை வெளியில் கூடிச் சென்று டீயோ காபியோ குடுத்தார்கள்.

ரோடில் வாடிப்பட்டி மேளக்காரர்கள் மூன்று பேர் தாளம் போட்டவாறே கால்களை ஒரே மாதிரி வைத்து சீராக ஆடினார்கள்.

வானம் மழை பொழியத் தயாராக இருந்தது.

மொட்டை எடுக்கும் முன் தலையில் விட்ட தண்ணீர் கழுத்து வழியாக முதுகில் வழிந்து புட்டம் வரை சென்றது.

          அம்மாவின் முகத்தை கடைசி வரை பார்க்கவேயில்லை. கடைசியாகப் பார்த்தது எனது பார்ட்னர் வித்யாசாகர் மதுரை வந்தபோது சிக்கன் சமைத்து கொடுத்தபோதுதான். பார்க்காதது நல்லதுதான்.

          வரமுடியாத நண்பர்கள் மொபைலில் அழைக்க இரண்டு நாளானது. முதன் முறையாக நான் மொபைலில் துக்கம் விசாரிக்கப் பட்டேன். தேற்றுவதில் எல்லாரும் என்னைப்போலதான். அதுவும் மொபைலில்.

         பொதுவாகவே தூங்க 12 மணிக்கு மேல் ஆகும். காலையிலும் சீக்கிரம் எழுந்துவிடுவேன். பகல் தூக்கம் கிடையாது. அதனால் அந்த அதிகாலைக்கு பிறகு என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் மொபைல் அழைப்புகள் பெரும் பதற்றத்தைக் கொடுக்கின்றன. கெட்ட சேதியை எதிர்நோக்கும் பதற்றம். இதிலிருந்து மீள வேண்டும்.

ஆதலால் நண்பர்களே,
அருமையான ஒரு  பீருக்குப் பின்போ
அற்புதமான ஒரு  கலவிக்குப் பின்போ
சோர்வளிக்கும்  ஒரு தோல்விக்குப் பின்போ
கசப்பூட்டும்  ஒரு அவமானத்திற்குப் பின்போ
நீங்கள் இரவில் விழித்திருந்தால்
எனக்கு கால் செய்யுங்கள்.