Thursday, July 3, 2014

சரிந்து கிடக்கும் கற்கள்

ர்வதேசச் சரக்கு இறக்குமதி வளாகத்திலிருந்து பாஸ்கரின் உடல் வெளியே வந்த போது நான் பயந்தது போல இல்லை. நன்றாக பாக் செய்யப் பட்டிருந்த ஒரு பார்சல் பெட்டி. அவ்வளவு தான். தனது குடும்பத்தாலும் நண்பர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்ட, ஒரு முப்பத்து மூன்று வயதுக்காரனின் உடல் அதிலிருக்கிறது என்றால் யாருக்கும் நம்பக் கடினமாகவே இருக்கும். மீனம்பாக்கத்திலிருந்து காஞ்சீபுரம், செய்யாறு வரையில் இரண்டு மணி நேரம் தாக்குப்பிடிக்க வேண்டும். அபு கதறாமல். மாறாக அபு மிகச் சாதாரணமாகவே இருந்தான். இறப்புக்கும் உடலை வாங்குவதற்கும் இடையிலான நாட்களில் அவன் நிறைய அழுதிருந்தான்.

த்து நாட்களுக்கு முன், தொழில் விசயமாக, ஒரு ஞாயிறு மதியம் அபுவைக் கூப்பிட்ட போது குரல் உடைந்து கதறினான். பாஸ்கர் ஆஸ்திரேலியாவில் கார் விபத்துக்குள்ளாகி ’க்ரிடிக்கலாக’ இருக்கிறான் என்றான். கூடவே பயணித்த அம்மாவிற்கும் தம்பி மனைவிக்கும் சேர்ந்து அடிபட்டிருக்கிறது. அதற்குமேல் பேச முடியவில்லை. ஒரு சில நாட்களுக்கு முன்னால் தான் பாஸ்கர் தனக்கு வாங்கி அனுப்பவிருக்கிற லாப்டாப் பற்றிய லின்க்கை என்னைப் பார்க்கச் சொல்லியிருந்தான். அன்று மாலையே இறப்பு உறுதி செய்யப்பட்டது.

ரிரு நாட்களில், ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது என்பது தெளிவில்லாமலிருக்க, அபுவே அங்கு செல்ல முடிவெடுத்தான். பழைய பாஸ்போர்ட்டில் உள்ள இனிசியல் பிரச்சினை தீர்ப்பதற்காக அதாரம் வேண்டி அவனது வங்கி சென்று மேலாளரிடம் (ஆப்பரேஷன்ஸ்) கேட்க, அவர் வள்ளென்று விழுந்தார். அபு விசயத்தைச் சொல்லி வேண்டையிலேயே கண்ணில் நீர் முட்டியது. வேறு ஆதாரங்களைக் காட்டியும், ’போதாது கெஜட்டில் மாற்றிக் கொண்டு வா’ என்றார். இது வேலைக்காகாது என்று முதன்மை மேலாளரிடம் போனோம். அவரும் அதையே சொல்ல ஆரம்பிக்க, அபு உடைந்து, கண்ணீர் வழிய பாஸ்போர்ட்டின் அவசரத் தேவை பற்றிய காரணம் சொன்னான். பாஸ்கரின் விபத்து பற்றிய ஆஸ்திரேலிய போலீஸ் செய்தியைப் பார்த்த பின்பே மேலாளர் மனம் இரங்கினார். பிரச்சினை தட்கல் பாஸ்போர்ட் எடுக்கையிலும் வந்தது. 'நான் கிறிஸ்த்தவனாக மாறி, ஜான் என்று பேர் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது,' என்றான் அபு.

டுத்த சில தினங்களில் அம்மாவும் தம்பி மனைவியும் இந்தியா வந்து விடுவார்கள் என்ற தகவல் கிடைத்ததால், பிறகு அபு அங்கு செல்லவேண்டிய தேவையில்லாமல் போனது. அவர்களை அழைத்துக்கொள்ள சென்னை சர்வதேச வருகைப் பகுதியில் காத்திருக்கையில் அபு அமைதியாகவே இருந்தான். நேரம் செல்லச் செல்ல மவுனமும் இறுக்கமும் ஊறி ஊறித் திரண்டு கொண்டிருந்தது. வருகைப் பகுதியின் நீண்ட பாதையில் யார் யாரோ வர வர இறுக்கம் மேலும் கூடியது. பிறகு அது நடந்தது. அம்மா உடைந்து சரிந்து, நண்பர் ஒருவர் தாங்கிப் பிடித்தவாறு கூட்டிவர, அழுதவாறு வந்தார். அவரது கண்கள் அபுவைத் தேடிக் கொண்டிருந்தன. அந்த ஒரு கணத்தைக் கடக்கவே இவ்வளவு நாளும் அபு காத்திருந்தான். தம்பி மனைவி, தலைமுடி காற்றில் பறக்க, தனது தாயை நோக்கிக் கதறியவாறு ஒடினார். அவர்கள் இருவருமே இப்போதுதான், பாஸ்கர் இறந்து ஐந்து நாள் கழித்து, தங்களது குடும்பத்தைப் பார்க்கிறார்கள் என்பதே எனக்கு உறைத்தது.

நான் செய்யாறில் இருந்த நாள் முழுதும், ஆட்கள் வர வர, அழுகையும் கதறலும் கூடியும் குறைந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. பெரியவர் ஒருவரிடம் அம்மா, “எம் பக்கத்துலதான் இருந்தான். சுத்தி மரங்க இருந்துச்சு, தண்ணி பக்கத்துல ஓடிக்கிட்டுருந்துச்சு” என்றார். பெரியம்மா ஒருவர், ‘யே, சதிகார தெய்வமே, உனக்கு கண்ணில்லையா,” என்று கதற, மொத்த சனமும் உடைந்து கதறியது. இரவு ஒவ்வொருவராய்க் கரையக் கரைய, இருள் சூழ்ந்து வீடு மவுனமானது.

செய்யாறிலிருந்து சென்னை வரும் வழியில், கல் குவாரி ஒன்றில் உடைத்துச் சரிக்கப்பட்ட கற்கள் அருகிலிருக்கும் குன்றைப் பார்த்தவாறு கிடக்கின்றன.

புவின் நண்பர் ப்ரசன்னா ஒரு நாள், கூகுள் மேப்சில், விபத்து நடந்த, விக்டோரியாவிலிருந்து ஹால் என்ற இடத்துக்குப் போகும் சாலையைக் காண்பித்தார். அவர் திரையில் இழுக்க இழுக்க நீண்டு வரும் சாலையைக் கூர்ந்து கவனித்தோம். எங்கேயாவது சாலையோரம் மரத்தில் மோதி நிற்கும் காரைக் கண்டுவிடமுடியும் என்பதுபோல்.

னி இரவு, இதிலிருந்து சட்டென்று வெட்டிக்கொள்ள வேண்டி நுழைந்த பல்லாவரம் டஞ்சன் பாரில் பியர் நன்கு குளிர்ந்திருந்தது. நகரத்தில் தனித்து விடப்பட்டவர்களின் இளைப்பாறுதல் நன்கு குளிரூட்டப்பட்ட பியரிலேயே இருக்கிறது. எவ்வளவு குளிரூட்டப்பட்டிருக்கிறதோ அவ்வளவு இளைப்பாறுதல்.

ரு புதன் கிழமை காலை வந்த பாஸ்கரின் உடல் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மாலை 4 மணிக்கு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபோது நான் சற்று ஆசுவாசமடைந்தேன். தனது இருப்பினால் எங்களை உறுத்தாத ஒரு சாதாரணப் பெட்டியாகத்தான் அது இருந்தது. அங்கிருந்து செய்யாறு செல்லும் இரண்டு மணி நேரமும், தொடர்ந்து மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு தரம், கிட்டத்தட்ட நாலைந்து பேருக்கு, வண்டி எங்கே வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

ம்புலன்ஸ் தெருவில் நுழைந்ததும் வீட்டிலிருந்து பெருஞ்சத்தம் எழுந்தது. இந்த ஒரு தருணத்திற்காகவே காலையிலிருந்து பலரும் காத்திருந்தனர். பெட்டியை நானும் சிலரும் சேர்ந்து வீட்டினுள் வைக்க மீண்டும் பெண்கள் பெருங்குரலெடுத்துக் கதறினர். பெட்டியின் கார்ட்போர்டு பகுதியை முதலில் பிரித்து எடுக்க உள்ளே ஒரு அரக்கு நிற சவப்பெட்டி இருந்தது. திருப்புளியும் உபகரணங்களும் கொண்டு திறக்க, ஒருவிதமான ரசாயன வாடையோடு, வெள்ளைத் துணியில் நன்கு சுற்றப்பட்டு, முகம் மட்டும் தெரியுமாறு பாஸ்கரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. 

ல்லாரும் அபுவிடம் ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்கள். நானும் கூட ஏதாவது சொல்லத்தான் வேண்டும். சரி.

”அபுபக்கர் சித்திக், சதிகார தெய்வங்களிடம் கவனமாயிரு.”    

Tuesday, April 1, 2014

ஒரு குதிரையும் இரண்டு துப்பாக்கிகளும்



 

மெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸில் வேலை பார்க்கப் போவதாக பாலாஜி சொன்ன போது நான் ஒரு விதமாகக் கிளர்ச்சியடைந்ததை அவனால் புரிந்து கொண்டிருக்க முடியாது. மேலும் அங்கிருந்து அவன் பேசும்போதெல்லாம் அவனை க்ராண்ட் கான்யான் (Grand Canyon) போய்ப் பார்க்குமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தேன். அவன் அதைச் செய்யாமல் போனதில் நான் எதை இழந்தேன் என்று தெரியவில்லை. 

இது ஒரு வகை வாயரிஸம் (vouyerism) போல. நான் ஒரு போதும் சென்றிருக்காத ஒரு இடம் இவ்வளவு உணர்வூட்டுவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. நான் பள்ளிப் பாடம் தவிர்த்து முதலில் படித்த காமிக்ஸ்கள் வழியாக நான் ஏற்கனெவே அங்கு சென்றிருக்கிறேன். உயர்ந்த கள்ளிச் செடிகளும் பெரும் பாறைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த அரிசோனாவின் நிலத்தில், ஒரு செங்கல் நிறக் குதிரையில் இடுப்பு பெல்ட்டில் தொங்கும் துப்பாக்கிகளோடு தொப்பியை முன்னால் சரித்தபடி அலைந்திருக்கிறேன்.. இரண்டாவது மூன்றாவது வகுப்பு படிக்கும் போதே காமிஸ்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன். அதோடு, அக்கா செயின்ட் ஜோசப் பள்ளியிலிருந்து கொண்டு வரும் சிறு பிரசுரங்களில் இருந்த பைபிள் கதைகளும் வாசிப்பின் தொடக்கம். ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை அவனியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கடையில் கிடைத்தது. அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் புதிதாக எதுவும் தொங்குகிறதா என்று பார்ப்பேன். வீடு செழித்திருந்த காலமாகையால் கையில் கொஞ்சம் காசு புழங்கியது. புத்தகம் கிடைக்காததுதான் குறை. தெற்குவாசல் போனால் எல்லாம் கிடைக்கும். கொஞ்சம் தள்ளி பெரியார் நிலையம் போனால் என்னன்னவோ பேரிலெல்லாம் காமிக்ஸ்கள் கிடைக்கும். என்ன கொஞ்சம் நம்மூர் ஒவியர்களே தங்கள் கைத்திறமையைக் காட்டிக் கலங்கடித்திருப்பார்கள். ராணி, முத்து, திகில் காமிக்ஸ்களின் சித்திரத் தரம் அவற்றில் இல்லையென்றாலும் வேறு வழியின்றி கண்டதையும் படித்தேன். தெற்குவாசல் போக என்னைவிட வயதில் மூத்த ஒரு நண்பர் இருந்தார். அவரிடம் 5 ரூ கொடுத்தால் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, தெற்குவாசலோ பெரியாரோ போய்க் கிடைத்ததெல்லாம் வாங்கி வருவார். அப்பொது ராணி காமிக்ஸ் 1.50 ரூ தான். சைக்கிள் வாடகை என்ன ஒரு அய்ம்பது பைசா இருக்கும். மீதத்துக்கு குறைந்தது 2 புத்தகமாவது வாங்கலாம். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு. சில சமயம் கைய விரித்து விடுவார். அந்த சமயம் இதெல்லாம் ஒரு ஊரான்னு வரும். 

அப்போதைய ராணி காமிக்ஸின் பிரதான கதாபாத்திரம் 007 ஜேம்ஸ்பாண்ட் தான். பளபளக்கும் ஷூவோடு நேர்த்தியாக உடையணிந்திருப்பார். சினிமாவைப் போலவே காமிக்ஸிலும் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் காட்சியோடுதான் வருவார். பல கதைகளின் அட்டைப் படங்கள் தெளிவாக நினைவில் உள்ளன. ஜேம்ஸ்பாண்ட் ஒரு க்ளைடரில் பறந்தவாறு ஒரு அட்டைப் படம், ஒரு கவ்பாய் குதிரையில் நிற்கும் படம் (பலி வாங்கும் பணம் என்று நினைக்கிறேன்) போலப் பல நினைவில் இருக்கின்றன. டைகர், ஜேம்ஸ், இன்ஸ்பெக்டர் ஆசாத் போன்ற தொடர் நாயகர்களின் கதைகளோடு தனிக்கதைகளும் ஏராளம் வந்தன. அதில் பல அற்புதமான வெஸ்டென் (கவ்பாய் கதைகள்) கதைகள் இருந்தன. அமெரிக்க ராணுவத்தால் தவறாகத் தண்டிக்கப் படும் ஒரு படைத்தலைவர் செவ்விந்தியர் பக்கம் சேர்ந்துகொண்டு வெள்ளையருக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்த, அவர் பக்க நியாயத்தை உணர்ந்த நாயகன் சமாதானம் பேசப் போய்த் தோற்று வருகிறான். இக்கதையின் ஒரு கட்டத்தில் (உண்மையிலேயே ஒரு கட்டத்தில்தான்), செவ்விந்தியர்கள் முடமான அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி ஒரு திரைப்படத்தின் உச்சக் காட்சியைப் போல மன எழுச்சியைக் கொடுத்தது. இப்போது யோசிக்கையில் நான் வாழ்வின் துக்கமான தருணங்களை எழுத்தில் (படமும் சேர்ந்துதான்) வாசிக்க ஆரம்பித்தது காமிக்ஸில் தான் என்று தோன்றுகிறது. சித்திரம் எழுத்தின் ஒரு பகுதியாகவே காமிக்ஸில் இருக்கிறது. 

லயன் காமிக்ஸ் ராணியிலிருந்து வேறுபட்டிருந்தது. சிறிய வடிவம், சிறிய சித்திரங்கள், தடித்த உரு என்று இருக்கும். தீபாவளிக்கோ ஆண்டு விழாவுக்கோ ரூ 5 விலையில் ஏழெட்டுக் கதைகளோடு வரும். முடிவே இல்லாமல் படித்துக்கொண்டிருக்கலாம் போல இருக்கும். ராணி காமிக்ஸில் வடிவை மாற்றவே மாட்டார்கள். வாழ்வின் சகல கணங்களையும் ஒரே மாதிரி எதிர்கொள்ளும் துறவி போல ஒரே வடிவம்.
ஆறாம் வகுப்பிலிருந்து தெப்பக்குளம் அருகில் தியாகராசர் மாடல் பள்ளி. அதுவரை வேனில் போய்க்கொண்டிருந்தவன் பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி அவனியாபுரத்திலிருந்து பெரியார் நிலையம், அப்புறம் 4ம் நம்பரில் ஏறி தெப்பக்குளம் என்று போக ஆரம்பித்தேன். பலரும் 4A அனுப்பானடி செல்லும் பேருந்தில் ஏறி பள்ளிக்கு அருகே இறங்கிக் கொள்ள நான் மட்டும் தெப்பக்குளத்தில் இறங்கி தனியே நடந்து போவேன். இனிமேல் வாழ்வில் எல்லாவற்றையும் எனக்கு நானே செய்துகொள்ளலாம். பேருந்தில் பெரிய அண்ணன்களுடனும் அக்காக்களுடனும் பயணம் செய்வது கிளர்ச்சியூட்டக்கூடியதாயிருந்தது. அப்போது நான் வீட்டில் கிடைத்த சாண்டில்யன் நாவல்களைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பிறகு ஒரு நாள் பள்ளியில் நீயூ சென்ச்சுரி புக் ஹவுஸின்(NCBH) புத்தகங்கள் விற்றார்கள். நேர்த்தியான வடிவில் நம்ப முடியாத குறைந்த விலையில் ரஷ்ய நாவல்கள். விடிவெள்ளி (யார் எழுதியது என்று தெரியவில்லை) என்ற நாவல், அலெக்சாண்டர் பூஷ்கினின் காப்டன் மகள் போன்ற சில புத்தகங்கள் வழியாக ரஷ்ய இலக்கியம் அறிமுகமானது. சித்திரங்கள் இல்லாத எழுத்தைப் படிப்பதே பெரியவனுக்கு அழகு என்று நம்ப ஆரம்பித்தேன். தடியான, கார்க்கியின் ’தாய்’ நாவலை முடித்த போது பெரிய சாதனையச் செய்த மன எழுச்சியோடு வீதியில் இறங்கி நடந்தேன்.

ஒரு வகையில் பார்த்தால் நான் விட்டு வந்த இடத்திலேயே தமிழ் காமிக்ஸ் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. வாசகர்கள் அங்கேயே நின்று விட்டார்களோ என்று தோன்றுகிறது. தமிழில் காமிக்ஸ் சந்தை விரிவடையவே இல்லை. கடந்த இருபது வருடங்களில் தொலைக்காட்சி இளம் வயதினரிடையே வாசிப்பை, அதுவும் தமிழில், ஒழித்துக் கட்டியிருக்கிறது. தமிழ் காமிக்ஸைப் பொருத்தவரை பழைய வாசகர்களையே தக்க வைக்க பதிப்பகங்கள் (லயனின் விஜயன் ஒரு போராட்டமாகவே இதை முன்னெடுக்கிறார்) போராட வேண்டிய சூழல். விரிவடையாத சந்தையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட முடியாது என்பதே உண்மை.

சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் ஆலன் மூரின் ’ஃப்ரம் ஹெல்’ (Allan Moore-From Hell) வழியாக காமிக்ஸில் நுழைந்தேன். ஆர்ட் ஸ்பீகல்மேனின் ’மாஸ்’ (Maus), ஒசாமு டெசுகாவின் ’புத்தா’ (Osamu Tezuka –Buddha) என்று க்ராஃபிக் நாவல்கள் வழி இழந்ததை மீட்டெடுக்க முயல்கிறேன். இணையம் பெரிய வரம்தான். இப்போது, எனது லாப்டாப்பின் 14 இன்ச் LED திரையில், சின்னச் சின்னக் கட்டங்கள் வழியே காமிக்ஸ்கள் வாழ்வைப் பிரதியெடுத்துக் கொண்டேயிருக்கின்றன. ஓயாமல்.  
 

Thursday, September 12, 2013

ஜேங்கோ அன்செயின்டு (Django Unchained ) - சில குறிப்புகள்


பூமணியின் 'அஞ்ஞாடி' நாவலில் ஒரு இடம் வருகிறது. நாடார்களின் தோல் சீலைப் போராட்டத்தின் உச்சியில் ஒரு கொந்தளிப்பான கட்டத்தில் திவான் திருவிதாங்கூர் மகராசாவிடம் பேச, அவர் பிரச்சினையைத் தீர்க்கவெண்ணி, "நாடார் பெண்கள் சீலை போடுறதுனால ஒன்னும் ஆயிடாதில்லையா?" என்கிறார். அதற்கு திவான், 'என்னருந்தாலும் ரெண்டு பொம்பிளைகளுக்கும் வித்தியாசம் வேணுமில்லையா?' என்று பதறுகிறார். அதற்கு ராசா, "போட்டுக்கலாம். ஆனா மேல்சாதிப் பொம்பிளைக சாயலில் போடக்கூடாது" என்று முடிவு சொல்கிறார்.  க்வெண்டின் டரன்டினோ வின் ஜேங்கோ வில் அப்படி ஒரு காட்சி வருகிறது. டாக்டர் ஸ்சுல்ட்சும் ஜேங்கோவும் ஒரு பண்ணையில் நுழைகிறார்கள். கருப்பர்கள் யாரும் குதிரையில் சவாரி செய்யக்கூடாது என்று சொல்லும் பண்ணை முதலாளியிடம்  ஸ்சுல்ட்ஸ் ஜேங்கோ தனது வேலையாள் என்றும் அவன் ஒரு சுதந்திர மனிதன் என்றும் சொல்கிறார். முதலில் மறுக்கும் முதலாளி பின்பு வியாபார ஆசை உந்த ஸ்சுல்ட்சை உள்ளே கூப்பிடுகிறார். ஸ்சுல்ட்ஸ் பண்ணை முதலாளியிடம் ஜேங்கோவை அடிமையாகப் பார்க்கக் கூடாதென்றும் தன்னுடைய நீட்சியாகவே பார்க்கவேண்டும் என்றும் சொல்கிறார். அதோடு வியாபாரம் பேசும் நேரத்தில் ஒரு வேலைக்காரப் பெண்ணை விட்டு ஜேங்கோவிற்கு அந்தப்  பண்ணையைச் சுற்றிக்கான்பிக்குமாறும் வேண்டுகிறார். சரியென்ற முதலாளி ஒரு அடிமைப் பெண்ணைக் கூப்பிடுகிறார்.
"பெட்டினா, ஜேங்கோவை கூட்டிக்கொண்டு இங்குள்ள எல்லா அழகான இடத்தையும் சுற்றிக் காமி"
"நீங்க விரும்புற மாதிரியே செய்யிறேன் ஐயா"
"ஜேங்கோ ஒரு அடிமையில்லை. சுதந்திர மனுசன். நீ மத்த நிக்கர்களைப் போல ஜேங்கோவை நடத்தக் கூடாது. ஏன்னா ஜேங்கோ மத்த நிக்கர் போலக் கெடையாது"
"வெள்ளைக்காரங்கள நடத்துரதப் போல ஜேங்கோவை  நடத்த சொல்றீங்களா?"
"இல்ல. நான் அப்படிச் சொல்லல"
"அப்ப நீங்க என்ன விரும்புறீங்கன்னு எனக்குத் தெரியலைய்யா "
சற்று குழம்பிய பண்ணை பக்கத்திலிருக்கும் வேலைக்காரப் பெண்ணிடம் கேட்கிறார்.
"டவுனிலிருந்து வந்து கண்ணாடி வேலை செய்யிற அந்தப் பையன் பேரென்ன. அவங்கம்மா கூட மரக்கடையில வேல செய்யிறா"
"ஜெர்ரி"
"ஆ. ஜெர்ரி . உனக்கு ஜெர்ரியத் தெரியுமில்ல?"
"தெரியும் யா"
"அப்ப சரி. நீ ஜெர்ரிய நடத்துரதப் போல ஜேங்கோவ நடத்து"
 இங்கே ஜெர்ரியைக் குறிக்கையில் 'பெக்கெர்வுட் பாய்' (Peckerwood) என்கிறார் பண்ணை. அப்படியென்றால் 'கீழான, மதிக்கத் தேவையற்ற' என்றும் அர்த்தம் வருகிறது.

டம் முழுவதும் இசைக் கோவைகளால் நிரம்பியிருக்கிறது. அல்லது இசையின் இடையே நாடகம் நிகழ்த்தப்படுகிறது. பலமுறை கண்டு மனப்பாடம் ஆன செர்ஜியோ லியோனின் புகழ் பெற்ற வெஸ்டெர்ன்  படங்களின் ஆதர்ச இசையமைப்பாளர் என்னியோ மாரிகோன் பங்களிப்பும் இதில் உள்ளது. படத்தில் பல இடங்களில் காட்சியும் இசையும் வெறி கொண்டு புணரும் பாம்புகளைப் போல முயங்கிக் கலக்கின்றன. குறிப்பாக பண்ணையில் பிரிட்டில் சகோதரர்களை அடையாளம் கண்டு கொல்லும் போது வரும் இசை (Luis Bacalov - La Corsa (2nd version) ). மெதுவாய் நகரும் பாம்பாய் நெளிந்து விரைந்து பின் நின்று உயர்ந்து படமெடுக்கும். ஹில்டா வை தண்டனைக் குழியிலிருந்து வெளியே எடுக்கும் போது வரும் இசை ( Ennio Maricone - Sister Sara's Theme ). இன்னும் பல பாடல்களும் ( Ancora Qui – Elisa Toffoli, Freedom – Anthony Hamilton, Elayna Boynton, 100 Black Coffins – Rick Ross) படத்தை பெரும் நாடகமாக்குகின்றன. சில ஹிப் ஹாப் பாடல்களும். கருப்பு பௌன்டிஹன்டரைப் (அரசாங்கப் பரிசுப் பணத்துக்காக குற்றவாளிகளை வேட்டையாடுபவர்கள்) பாட மென்மையாக கிடாரை இசைக்கும் கன்ட்ரி பாடகர்கள் மட்டும் போதவில்லை போலும்.


ப்ரிட்டில் சகோதரர்களைக் கொன்ற பிறகு இரவில் வெட்டவெளியில் ஓய்வெடுக்கும் ஜேங்கோவையும் டாக்டர் ஸ்சுல்ட்சையும் கொல்ல பண்ணை ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருகிறார். கண்கள் மட்டும்  பார்க்கும் படிக்கு இரண்டு ஓட்டைகள் போட்ட பையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு வரும் கூட்டம் ( Ku Klux Klan  -  இந்தப் பின்னணியில் ஒரு டெக்ஸ் வில்லர் காமிக்ஸ், ஜான் கிரிஷாமின் The Chamber படித்ததுண்டு). பையைத் தலையில் மாட்டிக்கொள்வதில் பிரச்சினை வருகிறது. பண்ணை நன்றாகப் பார்க்கத் தோதாக ஓட்டையைப் பெரிதாக்க முயல பை கிழிகிறது.
" ஒ ஷிட், நான் இத மோசமாக்கிட்டேன்."
" யாரு இந்தக் கேவலமானதச் செஞ்சது?"
"வில்லார்டோட  பொண்டாட்டி."
"அப்ப நீங்களே உங்கத செஞ்சுக்கங்க."
"இங்க பாரு ஜென்னி செஞ்சதப் பாராட்டக்கூடாதுன்னு யாரும் சொல்லல."
"நான் சொல்லுறது என்னன்னா, பையில ஓட்டை போடுரதுதான் செய்யணும்னு இருக்குறப்ப இத விட நல்லாவே போட்டுருப்பேன்."
" ஒனக்கு எப்பிடி ராபர்ட் பாக்க முடியுதா?"
"ரெம்ப நல்லால்ல. அதாவது நான் தலைய அசைக்கலன்னா உன்ன நல்லாப் பாக்கமுடியுது. குதிரைய ஓட்டுறப்ப பை தலையில ஆடிக்கிட்டு, குருடன் போல சவாரி செய்றேன்."
"நான் இப்ப என்னோடத மோசமாக்கிட்டேன். யாராவது எக்ஸ்ட்ரா பை கொண்டுவந்துருக்கீங்களா?"
"இல்ல, ஒருத்தனும் எக்ஸ்ட்ரா பை கொண்டு வரல்ல."
 "நான் கேக்கதான் செஞ்சேன்."
" நாம சவாரி போறப்ப இதப் போட்டுக்கத்தான் வேணுமா?"
"நீ சவாரி செய்யிரப்ப இதப் போட்டுக்கலன்னா அது நோக்கத்தையே  கெடுத்துரும்."
"ஆனா இதுல என்னால பாக்க பாக்க முடியல. என்னால மூச்சு விட முடியல. சவாரி செய்ய முடியல"
"நீங்க எல்லாரும் ங்கோத்தா நாசமாப் போங்க. நான் வீட்டுக்குப் போறேன். உங்கள மாதிரி நன்றி கேட்ட தேவடியாப் பசங்களுக்கு நாள் முழுக்க என் பொண்டாட்டி இந்த 30 பையையும் செய்றதப் பாத்துட்டு இங்க வந்தா நான் கேக்கிறதெல்லாம் ஒரே குத்தம் குறை. இப்பருந்து எங்கிட்ட எதையும் கேக்காதீங்க."- பைகள் ஏற்பாடு செய்தவன் கோபமாகப் போகிறான்.
" சரி நாம இப்ப ஏன் இங்க வந்தமுன்னு  மறந்திரக் கூடாது. அந்த மலையத் தாண்டி ஒரு கொலைகார நிக்கர் இருக்கான். அவன் மூலமா ஒரு பாடத்தக் கத்துக் குடுக்கனும்"
"ஓகே, ஆனா எனக்கு குழப்பமா இருக்கு. பையப் போட்டுக்கிட்டா போடாமலா?"
"இந்தப் பை நல்ல ஐடியான்னு நான் நெனச்சேன், நாம எல்லாரும் நெனச்சோம். ஆனா யாரையும் குத்தம் சொல்லாமப் பாத்தா இத இன்னும் நல்லாச் செய்துருக்கலாம். அதனால  நாம ஏன் பை இல்லாம இந்த தடவ போகக் கூடாது? அடுத்த தடவ  பையச் சரியாப் பண்ணிக்கிட்டு முழு வேசத்துல போவம்"
"எனக்கு இந்த ஐடியா பிடிச்சிருக்கு"
பண்ணை கடுப்பாகி குறுக்கிடுகிறார்.
"ஒரு நிமிஷம் இருங்க. பை வேணாம்னு நான் சொல்லலையே"
"ஆனா யாரும் பாக்க முடியல"
"அதனாலென்ன?"
"அதனாலென்னன்னா பாக்க முடிஞ்சா நல்லாருக்கும்"
"நாசமாப் போக, இது ஒரு தாக்குதல். நான் பாக்க முடியல. நீ பாக்க முடியல. அதனாலென்ன? குதிரையால பாக்க முடியும்கிறது தான் முக்கியம். அதுதான் தாக்குதல்."
அப்புறம் பையைப் போட்டுக் கொண்டு தாக்குகிறார்கள். பகடியின் உச்சம்.

வெவ்வேறு விதமான கருப்பர்கள் படம் நெடுகிலும் வருகிறார்கள்.  வரிசையாக விலங்கிடப்பட்டு விற்பனைக்காகக் கொண்டு செல்லப் படுபவர்கள்.எசமானுக்காகச் சண்டை போட்டுச் சாகிறவர்கள். தப்பிக்க முனைந்து, பிடிபட்டு, நாய்களால் குதறப்பட்டு சாகிறவர்கள். இப்படி.  படத்தில் வரும் இன்னுமொரு ஆப்பிரிக்க அடிமை குதிரையின் மீது சவாரி செய்யும் ஜேங்கோவை வெறுப்புடன் பார்த்துக் காறி உமிழ்ந்தவாறே வருகிறான். இறுதியில் ஜேங்கோ வெள்ளையர்களைத் தந்திரமாக ஏமாற்றித் தப்பிக்கையில் உறுத்தல் சிறிதுமின்றி அவர்களைக் கொல்கிறான். அடிமை அதைப் பார்த்து ஜேங்கோவை வியக்கிறான். வியாபாரப் பண்டம் சுயத்தைப் பார்த்து பிரமிக்கிறது.

டைசியாகக் கேண்டிலேன்ட் பண்ணையில் வரும் கருப்பர் பண்ணை முதலாளி கால்வின் கேண்டியையே அதிகாரம் பண்ணுகிறார். வெளியில் தான் அப்படியென்றால் எல்லாரும் பார்க்க தனியாக முதலாளியை விருந்திலிருந்து அழைத்து ரகசியம் உடைக்கையில் கூட கையில் ஒய்னோடு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து தோரணையாகப் பேசுகிறார். ஸ்டீபன் (டரன்டினோவின் முந்தைய பல படங்களில் வந்த சாமுவேல் எல். ஜாக்சன்- பல்ப் பிக்ஷன் (Pulp Fiction) நினைவு கூறுங்கள்) ஆக வரும் அந்த கதாபாத்திரம் மிகவும் நுட்பமானது. கிட்டத்தட்ட பண்ணையை அவரே மேலாண்மை செய்கிறார். நாம் இதை வியக்கையில் விளக்கம் பண்ணை முதலாளி கால்வின் கேண்டி மூலமாக வருகிறது. விருந்து மேசையின் மீது ஒரு வெல்வெட் பலகையை வைத்து அதன் மேல் ஒரு மண்டையோட்டை வைக்கிறார்.
" இது பென். இங்க ரெம்ப காலம் வாழ்ந்தவர். இங்கருக்குற ஓல்ட் பென் என்னோட அப்பாவப் பாத்திக்கிட்டாரு, என் அப்பாவோட அப்பாவப் பாத்துக்கிட்டாரு. செத்து மேல போற வரைக்கும் என்னைப் பாத்துக்கிட்டாரு. மிஸ்ஸிசிப்பியில பெரிய பண்ண முதலாளி மகனா வளர்றது ஒரு வெள்ளக்காரன ஏகப்பட்ட கருப்பு மூஞ்சிகளோட தொடர்பு கொள்ள வைக்குது. என் மொத்த வாழ்க்கையையும் இங்கதான் கழிச்சேன், இந்த கேன்டிலேண்டில். கருப்பு மூஞ்சிகள் சூழ. அவங்கள ஒவ்வொரு நாளும் பொழுதும் பாக்கையில எனக்கு இப்ப ஒரே ஒரு கேள்வி தான் தோணுது. ஏன் அவங்க நம்மளக் கொல்லக் கூடாது. இந்தா அங்கருக்கிற வாசல்ல, வாரத்துக்கு மூணு தடவ அம்பது வருசமா ஒரு கூரான கத்தியால பென் எங்கப்பாவுக்கு சவரம் பண்ணி விடுவாரு. இப்ப, நான் பென்னா இருந்திருந்தா எங்கப்பாவோட கழுத்த அறுத்திருப்பேன். அதோட அதைச் செய்ய எனக்கு ஒரு அம்பது வருசமும் ஆயிருக்காது. ஆனா அவர் அதை செய்யவே இல்ல. ஏன் கூடாது?"
கால்வின் கேண்டி மண்டையோட்டை அறுக்கிறார். பிறகு ஒரு ஆப்பிரிக்கன் ஏன் அதைச் செய்ய முடியாதென்று Phrenology அடிப்படையில் விளக்குகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை மேலாதிக்கத்தை 'அறிவியல்' பூர்வமாக நிறுவ இது போன்ற பல அறிவுத் துறைகள் இருந்திருக்கின்றன போலும். 

நான் படித்த உயர்மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை, விளையாட்டுத் திடலின் முடிவில் ஒரு தோப்பை ஒட்டி இருந்தது. ஒரே நெட்டுவாக்கில் மாணவர்கள் வரிசையாக மூத்திரம் பெய்யும் வகையில். உடனொத்தவர்கள் வரிசையாகக் குறியைத் தாழ்த்தி மூத்திரம் பெய்கையில் யாராவது சேட்டைக்காரன் வெட்கமின்றி குறி நிமிர்த்தி சுவரில் சித்திரம் வரைவான். டரன்டினோவைப் போல.