Tuesday, August 21, 2018

I Know You Bitch

நேற்றுக் காலை பீபீ குளம் நாற்சந்தி டீக்கடையில் நானும் பிற ஏழெட்டுப் பேரும் கையில் டீக்கிளாசை வைத்திருந்த போதுதான் அவள் தோன்றினாள். அதற்குமுன் அவளைஅங்கு நான் பார்த்ததில்லை. ’ஒரு டீ கொடு’ என்று அவள் இரைந்தாள். ரோட்டிலிருந்து சற்றே உயரமான படிகளைக்கொண்ட டீக்கடை அது. கீழே நின்று டீ குடித்துக்கொண்டிருந்தவர்களும் இப்போது மேலேறி விட்டனர். ரோட்டில் அவள் ஒற்றையாள். கைகளில் டீகிளாசோடு எல்லோரும் உள்ளொடுங்கி நிற்கின்றனர். கல்லாவில் இருந்தவர் வாடிக்கையாளரின் குழப்பத்தைத் தீர்க்கும் பொருட்டு அவளை அதட்டினார். அவள் நிறுத்தவில்லை. 'அண்ணே டீ வாங்கிக் கொடு', என்றாள் இப்போது. 'கொடுத்தாலும் குடிக்க மாட்டா', என்றார் கல்லாக்காரர். தனது வாடிக்கையாளர்களின் சஞ்சலம் போக்க அவர் இப்போது ஏதாவது செய்தாகவேண்டும். மிரட்சியை அவர் தணிக்கத்தான் வேண்டும். அவர்கள் ஆசுவாசமாகத் தங்களது பானத்தைப் பருக அவர் ஆவன செய்தாக வேண்டும்.
எல்லோரும் அவளை நேராகப் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் தொடர்ந்து இரைந்து கொண்டிருந்தாள். எல்லோரும் மிக மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தனர். முதலில் குடித்துமுடிப்பவர், கீழிறங்கி அவளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். டீ தீர்ந்துவிடாமலிருக்க இப்போது கிளாசைக் கையில் சும்மா வைத்துக்கொண்டனர் சிலர். நாவால் வெறும் கிளாசைத் துழாவினர் சிலர்.
நான் துணிந்துவிட்டேன். கிளாசை வைத்துவிட்டுக் கீழிறங்கினேன். ஒன்றுமே இல்லை என்பது போல நான் அவளத் தாண்டினேன். ஒரு கணம் அவள் எனது கையைப் பிடித்தாள். பிடிக்கக்கூட இல்லை லேசாக ஒரு அழுத்து அழுத்தினாள்.

Friday, October 9, 2015

புயலுக்கு ஆயத்தம் செய்பவன்!

புயலுக்கு ஆயத்தம் செய்பவன்!

சிகரட் முதலில் இப்படி ஆரம்பிக்கிறது. முதல் பத்தவைப்பில் நீங்கள் மிக விழிப்புடன் இருக்கிறீர்கள். சூழல் உங்களை உற்றுக் கவனிக்கிறது. உங்களுக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. சிகரட் கரைய ஆரம்பிக்கையில் சூழல் மறைகிறது. தொடர்ந்த இழுப்புகளில் நீங்களும் சிகரட்டும் மட்டுமே எஞ்சுகிறீர்கள். பின்பு ஏதோ ஒரு கணத்தில் நீங்களும் மறைய சிகரட் மட்டுமே எஞ்சுகிறது. சிகரட் கூட இல்லை, வெறும் புகை மட்டுமே.

2008 பிற்பகுதியில் தொழில் ஒரு முட்டுச்சந்தில் நின்று திகைத்துக்கொண்டிருந்தது. பின்வாங்கி வேறு வழிகளைக் கண்டடைய விடாமல் அகங்காரம் தோளில் அழுத்தும் கணங்களில் சிகரட் ஒரு தோழனைப் போல இருந்தது. தொழில் பங்காளிகளிடம் வாங்கி ஒரு இழுப்பு இழுப்பதில் ஆரம்பித்தது பின் தனியே ஒரு சிகரட் சொல்லுமளவுக்குப் போனது. தொழில் அல்லது வாழ்வு சார்ந்தே முக்கியமானதும் மனக்கசப்பானதுமான முடிவுகளை எடுக்க மனம் ஆயத்தப் பட்டுக்கொண்டிருந்த வேளைகளில் சிகரட் இன்னும் நெருங்கியது. அது ஒரு pause பட்டன் போல. பற்றவைத்ததும் உலகம் உறைந்து விடும். கீழே போட்டு மிதிக்கும் கணத்தில் உலகம் resume ஆகும். புகைப்பது நடனத்தில் தோய்வதற்கு ஒப்பானது. அல்லது நடனத்தின் ஒரு பாவனையே தான்.

டேக் ஷெல்டர் (Take Shelter - 2011) நாயகன் கர்டிஸுக்கு பாவனை வேறு ஒன்றாக இருக்கிறது. அது (இல்லாத) புயலை எதிர்கொள்வது. படத்தின் ஒரு காட்சியில் கர்டிஸ் மன நல ஆலோசகரைச் சந்திக்கையில், அவர் கேட்பதற்கும் முன்பே தான் ஒரு ஸ்கிசோஃப்ரீனியாக் இல்லையென்றும், அதற்கான சுயபரிசோதனைப் தேர்வில் இருபதுக்கு 5 மதிப்பெண் தான் எடுத்திருப்பதாகவும், குறைந்த பட்சம் 12க்கு மேல் இருந்தால் தான் மனப்பிறழ்வு எனக் கருதப்படுமென்றும் கூறுகிறான். ஆலோசகர் திகைத்துப் போகிறார். கர்டிசின் பிரச்சினை அதுதான். அதி தீவிர முன்னேற்பாடு.

உண்மையில் நவீன மனிதனின் பிரச்சினை அது. அவன் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும். அந்த ’எல்லாவற்றில்’ என்னென்ன இருக்கும் என்றும் தெரியாததே அதன் அவலம். அப்படித் தெரியாததையும் எதிர்கொள்ள ஒருவன் பாவனையைக் கைக்கொள்கிறான். பாவனை பலவகைப்படும். தொழில், கலை, அரசியல் என. பாவனைக்கும் நிதர்சனத்திற்குமான கோடு மயங்கும் தருணம் மனம் பிறழ்கிறது. அல்லது விடுதலையடைகிறது.

கர்டிஸ் ஒரு பெரும் புயல் தாக்கப் போவதாகக் கனவு காண்கிறான். பெய்யும் மழை நீர் பெட்ரோல் போல மஞ்சளாய் இருக்கிறது. கனவில் அடையாளம் தெரியாதோர் அவனைத் தாகுக்குகிறார்கள். மகளைத் தூக்கிச் செல்கிறார்கள். அவனது நாய் அவனைக் கடித்துக் குதறுகிறது. நெருங்கிய நண்பனே அவனைத் தாக்குகிறான். பின்பு ஒரு நாள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுகிறான். கனவில் கடித்த நாயை வீட்டுக்கு வெளியே கட்டிப்போடுகிறான். கனவில் தாக்கிய நண்பனை பணியிடத்தில் வேறு குழுவிற்கு மாற்றச் செய்கிறான். ஆனால் அதற்கும் மேலாக விழித்திருக்கையிலேயே பெரும் இடிச் சத்தத்தை தொடர்ந்து கேட்கிறான். அதிர்ந்து நிமிர்ந்து மேலே பார்க்கையில் வானம் வெளிர் நீலத்தில் சிறிய வெண்மேகத்துடன் இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் ஓரிரவு வானம் கடுமையாக இடித்து மின்னல் ஓட்டம் காட்டுகிறது. கரிய வானத்தில் மின்னல்கள் கிளை விட்டுப் பரவி இறங்கும் காட்சியில் மெய்மறந்திருப்பவன் சட்டென்று திரும்பி பார்க்கையில் சாலையில் வாகனங்கள் விரைவதைப் பார்த்து 'ஒருத்தன் கூட இதைக் கவனிக்கவில்லையா' என்று வியக்கிறான். சமந்தா (மனைவி) விரைவிலேயே எதோ பிரச்சினை இருப்பதைக் கண்டு கொள்கிறாள். கர்டிஸ் யாருக்கும் தெரிந்திராத ஒரு புயலை அஞ்சி வீட்டிற்கருகில் ஒரு பதுங்கு குழியை உருவாக்குகிறான். அதற்குத் தேவையான பணத்திற்கு வீட்டின் மேல் கடன் வாங்குகிறான். உச்ச கட்டமாக பதுங்கு குழியைத் தோண்டுவதற்காக வேலை செய்யும் இடத்திலிருந்தே எந்திரங்களைக் கொண்டுவந்ததன் நிமித்தம் பணி நீக்கம் செய்யப்படுகிறான்.

பணியிட விருந்தொன்றில் இவனால் தானும் பணி நீக்கத்திற்கு ஆளான நண்பன் இவனைத் தாக்க, கர்டிஸ் திரும்பித் தாக்குகிறான். பிறகு எல்லோரையும் பார்த்துக் கத்துகிறான். “ஒரு பெரிய புயல் வருகிறது. நீங்கள் இதுவரையில் காணாத அளவில். ஆனா, நீங்க ஒருத்தனும் இதற்கு தயாராக இல்லை.” சமந்தா பிரச்சினையின் தீவிரத்தை நேரில் கண்டு திகைத்துப் பின் ஆத்திரம் அடங்கி உடைந்தழும் கணவனைத் தாங்கிக் கொள்கிறாள்.

பிறிதொரு இரவில் இடி இடித்து மழை பொழிய, கர்டிஸ் மனைவி குழந்தையுடன் பதுங்கு குழிக்குச் செல்கிறான். உள்ளேயே உணவுக்குத் தேவையானதைச் சேமித்திருக்கிறான். கழிப்பிடமும் தூங்குமிடமும் கூட இருக்கிறது. மறு நாள் காலை சமந்தா பதுங்கிடத்தை விட்டு வெளியேறக் கேட்கிறாள். மேலேறித் திறப்பை அடைந்தவன், இன்னும் புயல் ஓயவில்லை என்கிறான். இல்லை ஓய்ந்துவிட்டதென்கிறாள். அவன் நீயே திற எனச் சாவியைக் கொடுக்கிறான். அவனே திறந்தாலொழிய அது முடிவுறாதென்கிறாள். வேறு வழியின்றி அவன் மேலேறித் திறக்கிறான். ஒளி தெறிக்கும் வெளிறிய வானம் கண்டு திகைக்கிறான்.

பின்பொரு நாள் முன்பே திட்டமிட்ட வகையில் ஒரு கடற்கரை வீட்டில் ஓய்வுக்காக செல்கிறார்கள். கர்டிஸ் மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் அவள் கடலில் தூரத்தே எதையோ காட்டுகிறாள். இப்போது மனைவியும் அதைக் காண்கிறாள். கருமேகம் திரண்டு சுழித்துக் கடலில் இறங்குகிறதை. பிறகு பெய்யும் மழை பெட்ரோலைப் போல மஞ்சளாயிருப்பதை.


Thursday, July 3, 2014

சரிந்து கிடக்கும் கற்கள்

ர்வதேசச் சரக்கு இறக்குமதி வளாகத்திலிருந்து பாஸ்கரின் உடல் வெளியே வந்த போது நான் பயந்தது போல இல்லை. நன்றாக பாக் செய்யப் பட்டிருந்த ஒரு பார்சல் பெட்டி. அவ்வளவு தான். தனது குடும்பத்தாலும் நண்பர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்ட, ஒரு முப்பத்து மூன்று வயதுக்காரனின் உடல் அதிலிருக்கிறது என்றால் யாருக்கும் நம்பக் கடினமாகவே இருக்கும். மீனம்பாக்கத்திலிருந்து காஞ்சீபுரம், செய்யாறு வரையில் இரண்டு மணி நேரம் தாக்குப்பிடிக்க வேண்டும். அபு கதறாமல். மாறாக அபு மிகச் சாதாரணமாகவே இருந்தான். இறப்புக்கும் உடலை வாங்குவதற்கும் இடையிலான நாட்களில் அவன் நிறைய அழுதிருந்தான்.

த்து நாட்களுக்கு முன், தொழில் விசயமாக, ஒரு ஞாயிறு மதியம் அபுவைக் கூப்பிட்ட போது குரல் உடைந்து கதறினான். பாஸ்கர் ஆஸ்திரேலியாவில் கார் விபத்துக்குள்ளாகி ’க்ரிடிக்கலாக’ இருக்கிறான் என்றான். கூடவே பயணித்த அம்மாவிற்கும் தம்பி மனைவிக்கும் சேர்ந்து அடிபட்டிருக்கிறது. அதற்குமேல் பேச முடியவில்லை. ஒரு சில நாட்களுக்கு முன்னால் தான் பாஸ்கர் தனக்கு வாங்கி அனுப்பவிருக்கிற லாப்டாப் பற்றிய லின்க்கை என்னைப் பார்க்கச் சொல்லியிருந்தான். அன்று மாலையே இறப்பு உறுதி செய்யப்பட்டது.

ரிரு நாட்களில், ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது என்பது தெளிவில்லாமலிருக்க, அபுவே அங்கு செல்ல முடிவெடுத்தான். பழைய பாஸ்போர்ட்டில் உள்ள இனிசியல் பிரச்சினை தீர்ப்பதற்காக அதாரம் வேண்டி அவனது வங்கி சென்று மேலாளரிடம் (ஆப்பரேஷன்ஸ்) கேட்க, அவர் வள்ளென்று விழுந்தார். அபு விசயத்தைச் சொல்லி வேண்டையிலேயே கண்ணில் நீர் முட்டியது. வேறு ஆதாரங்களைக் காட்டியும், ’போதாது கெஜட்டில் மாற்றிக் கொண்டு வா’ என்றார். இது வேலைக்காகாது என்று முதன்மை மேலாளரிடம் போனோம். அவரும் அதையே சொல்ல ஆரம்பிக்க, அபு உடைந்து, கண்ணீர் வழிய பாஸ்போர்ட்டின் அவசரத் தேவை பற்றிய காரணம் சொன்னான். பாஸ்கரின் விபத்து பற்றிய ஆஸ்திரேலிய போலீஸ் செய்தியைப் பார்த்த பின்பே மேலாளர் மனம் இரங்கினார். பிரச்சினை தட்கல் பாஸ்போர்ட் எடுக்கையிலும் வந்தது. 'நான் கிறிஸ்த்தவனாக மாறி, ஜான் என்று பேர் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது,' என்றான் அபு.

டுத்த சில தினங்களில் அம்மாவும் தம்பி மனைவியும் இந்தியா வந்து விடுவார்கள் என்ற தகவல் கிடைத்ததால், பிறகு அபு அங்கு செல்லவேண்டிய தேவையில்லாமல் போனது. அவர்களை அழைத்துக்கொள்ள சென்னை சர்வதேச வருகைப் பகுதியில் காத்திருக்கையில் அபு அமைதியாகவே இருந்தான். நேரம் செல்லச் செல்ல மவுனமும் இறுக்கமும் ஊறி ஊறித் திரண்டு கொண்டிருந்தது. வருகைப் பகுதியின் நீண்ட பாதையில் யார் யாரோ வர வர இறுக்கம் மேலும் கூடியது. பிறகு அது நடந்தது. அம்மா உடைந்து சரிந்து, நண்பர் ஒருவர் தாங்கிப் பிடித்தவாறு கூட்டிவர, அழுதவாறு வந்தார். அவரது கண்கள் அபுவைத் தேடிக் கொண்டிருந்தன. அந்த ஒரு கணத்தைக் கடக்கவே இவ்வளவு நாளும் அபு காத்திருந்தான். தம்பி மனைவி, தலைமுடி காற்றில் பறக்க, தனது தாயை நோக்கிக் கதறியவாறு ஒடினார். அவர்கள் இருவருமே இப்போதுதான், பாஸ்கர் இறந்து ஐந்து நாள் கழித்து, தங்களது குடும்பத்தைப் பார்க்கிறார்கள் என்பதே எனக்கு உறைத்தது.

நான் செய்யாறில் இருந்த நாள் முழுதும், ஆட்கள் வர வர, அழுகையும் கதறலும் கூடியும் குறைந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. பெரியவர் ஒருவரிடம் அம்மா, “எம் பக்கத்துலதான் இருந்தான். சுத்தி மரங்க இருந்துச்சு, தண்ணி பக்கத்துல ஓடிக்கிட்டுருந்துச்சு” என்றார். பெரியம்மா ஒருவர், ‘யே, சதிகார தெய்வமே, உனக்கு கண்ணில்லையா,” என்று கதற, மொத்த சனமும் உடைந்து கதறியது. இரவு ஒவ்வொருவராய்க் கரையக் கரைய, இருள் சூழ்ந்து வீடு மவுனமானது.

செய்யாறிலிருந்து சென்னை வரும் வழியில், கல் குவாரி ஒன்றில் உடைத்துச் சரிக்கப்பட்ட கற்கள் அருகிலிருக்கும் குன்றைப் பார்த்தவாறு கிடக்கின்றன.

புவின் நண்பர் ப்ரசன்னா ஒரு நாள், கூகுள் மேப்சில், விபத்து நடந்த, விக்டோரியாவிலிருந்து ஹால் என்ற இடத்துக்குப் போகும் சாலையைக் காண்பித்தார். அவர் திரையில் இழுக்க இழுக்க நீண்டு வரும் சாலையைக் கூர்ந்து கவனித்தோம். எங்கேயாவது சாலையோரம் மரத்தில் மோதி நிற்கும் காரைக் கண்டுவிடமுடியும் என்பதுபோல்.

னி இரவு, இதிலிருந்து சட்டென்று வெட்டிக்கொள்ள வேண்டி நுழைந்த பல்லாவரம் டஞ்சன் பாரில் பியர் நன்கு குளிர்ந்திருந்தது. நகரத்தில் தனித்து விடப்பட்டவர்களின் இளைப்பாறுதல் நன்கு குளிரூட்டப்பட்ட பியரிலேயே இருக்கிறது. எவ்வளவு குளிரூட்டப்பட்டிருக்கிறதோ அவ்வளவு இளைப்பாறுதல்.

ரு புதன் கிழமை காலை வந்த பாஸ்கரின் உடல் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மாலை 4 மணிக்கு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபோது நான் சற்று ஆசுவாசமடைந்தேன். தனது இருப்பினால் எங்களை உறுத்தாத ஒரு சாதாரணப் பெட்டியாகத்தான் அது இருந்தது. அங்கிருந்து செய்யாறு செல்லும் இரண்டு மணி நேரமும், தொடர்ந்து மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு தரம், கிட்டத்தட்ட நாலைந்து பேருக்கு, வண்டி எங்கே வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

ம்புலன்ஸ் தெருவில் நுழைந்ததும் வீட்டிலிருந்து பெருஞ்சத்தம் எழுந்தது. இந்த ஒரு தருணத்திற்காகவே காலையிலிருந்து பலரும் காத்திருந்தனர். பெட்டியை நானும் சிலரும் சேர்ந்து வீட்டினுள் வைக்க மீண்டும் பெண்கள் பெருங்குரலெடுத்துக் கதறினர். பெட்டியின் கார்ட்போர்டு பகுதியை முதலில் பிரித்து எடுக்க உள்ளே ஒரு அரக்கு நிற சவப்பெட்டி இருந்தது. திருப்புளியும் உபகரணங்களும் கொண்டு திறக்க, ஒருவிதமான ரசாயன வாடையோடு, வெள்ளைத் துணியில் நன்கு சுற்றப்பட்டு, முகம் மட்டும் தெரியுமாறு பாஸ்கரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. 

ல்லாரும் அபுவிடம் ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்கள். நானும் கூட ஏதாவது சொல்லத்தான் வேண்டும். சரி.

”அபுபக்கர் சித்திக், சதிகார தெய்வங்களிடம் கவனமாயிரு.”    

Tuesday, April 1, 2014

ஒரு குதிரையும் இரண்டு துப்பாக்கிகளும்



 

மெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸில் வேலை பார்க்கப் போவதாக பாலாஜி சொன்ன போது நான் ஒரு விதமாகக் கிளர்ச்சியடைந்ததை அவனால் புரிந்து கொண்டிருக்க முடியாது. மேலும் அங்கிருந்து அவன் பேசும்போதெல்லாம் அவனை க்ராண்ட் கான்யான் (Grand Canyon) போய்ப் பார்க்குமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தேன். அவன் அதைச் செய்யாமல் போனதில் நான் எதை இழந்தேன் என்று தெரியவில்லை. 

இது ஒரு வகை வாயரிஸம் (vouyerism) போல. நான் ஒரு போதும் சென்றிருக்காத ஒரு இடம் இவ்வளவு உணர்வூட்டுவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. நான் பள்ளிப் பாடம் தவிர்த்து முதலில் படித்த காமிக்ஸ்கள் வழியாக நான் ஏற்கனெவே அங்கு சென்றிருக்கிறேன். உயர்ந்த கள்ளிச் செடிகளும் பெரும் பாறைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த அரிசோனாவின் நிலத்தில், ஒரு செங்கல் நிறக் குதிரையில் இடுப்பு பெல்ட்டில் தொங்கும் துப்பாக்கிகளோடு தொப்பியை முன்னால் சரித்தபடி அலைந்திருக்கிறேன்.. இரண்டாவது மூன்றாவது வகுப்பு படிக்கும் போதே காமிஸ்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன். அதோடு, அக்கா செயின்ட் ஜோசப் பள்ளியிலிருந்து கொண்டு வரும் சிறு பிரசுரங்களில் இருந்த பைபிள் கதைகளும் வாசிப்பின் தொடக்கம். ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை அவனியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கடையில் கிடைத்தது. அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் புதிதாக எதுவும் தொங்குகிறதா என்று பார்ப்பேன். வீடு செழித்திருந்த காலமாகையால் கையில் கொஞ்சம் காசு புழங்கியது. புத்தகம் கிடைக்காததுதான் குறை. தெற்குவாசல் போனால் எல்லாம் கிடைக்கும். கொஞ்சம் தள்ளி பெரியார் நிலையம் போனால் என்னன்னவோ பேரிலெல்லாம் காமிக்ஸ்கள் கிடைக்கும். என்ன கொஞ்சம் நம்மூர் ஒவியர்களே தங்கள் கைத்திறமையைக் காட்டிக் கலங்கடித்திருப்பார்கள். ராணி, முத்து, திகில் காமிக்ஸ்களின் சித்திரத் தரம் அவற்றில் இல்லையென்றாலும் வேறு வழியின்றி கண்டதையும் படித்தேன். தெற்குவாசல் போக என்னைவிட வயதில் மூத்த ஒரு நண்பர் இருந்தார். அவரிடம் 5 ரூ கொடுத்தால் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, தெற்குவாசலோ பெரியாரோ போய்க் கிடைத்ததெல்லாம் வாங்கி வருவார். அப்பொது ராணி காமிக்ஸ் 1.50 ரூ தான். சைக்கிள் வாடகை என்ன ஒரு அய்ம்பது பைசா இருக்கும். மீதத்துக்கு குறைந்தது 2 புத்தகமாவது வாங்கலாம். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு. சில சமயம் கைய விரித்து விடுவார். அந்த சமயம் இதெல்லாம் ஒரு ஊரான்னு வரும். 

அப்போதைய ராணி காமிக்ஸின் பிரதான கதாபாத்திரம் 007 ஜேம்ஸ்பாண்ட் தான். பளபளக்கும் ஷூவோடு நேர்த்தியாக உடையணிந்திருப்பார். சினிமாவைப் போலவே காமிக்ஸிலும் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் காட்சியோடுதான் வருவார். பல கதைகளின் அட்டைப் படங்கள் தெளிவாக நினைவில் உள்ளன. ஜேம்ஸ்பாண்ட் ஒரு க்ளைடரில் பறந்தவாறு ஒரு அட்டைப் படம், ஒரு கவ்பாய் குதிரையில் நிற்கும் படம் (பலி வாங்கும் பணம் என்று நினைக்கிறேன்) போலப் பல நினைவில் இருக்கின்றன. டைகர், ஜேம்ஸ், இன்ஸ்பெக்டர் ஆசாத் போன்ற தொடர் நாயகர்களின் கதைகளோடு தனிக்கதைகளும் ஏராளம் வந்தன. அதில் பல அற்புதமான வெஸ்டென் (கவ்பாய் கதைகள்) கதைகள் இருந்தன. அமெரிக்க ராணுவத்தால் தவறாகத் தண்டிக்கப் படும் ஒரு படைத்தலைவர் செவ்விந்தியர் பக்கம் சேர்ந்துகொண்டு வெள்ளையருக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்த, அவர் பக்க நியாயத்தை உணர்ந்த நாயகன் சமாதானம் பேசப் போய்த் தோற்று வருகிறான். இக்கதையின் ஒரு கட்டத்தில் (உண்மையிலேயே ஒரு கட்டத்தில்தான்), செவ்விந்தியர்கள் முடமான அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி ஒரு திரைப்படத்தின் உச்சக் காட்சியைப் போல மன எழுச்சியைக் கொடுத்தது. இப்போது யோசிக்கையில் நான் வாழ்வின் துக்கமான தருணங்களை எழுத்தில் (படமும் சேர்ந்துதான்) வாசிக்க ஆரம்பித்தது காமிக்ஸில் தான் என்று தோன்றுகிறது. சித்திரம் எழுத்தின் ஒரு பகுதியாகவே காமிக்ஸில் இருக்கிறது. 

லயன் காமிக்ஸ் ராணியிலிருந்து வேறுபட்டிருந்தது. சிறிய வடிவம், சிறிய சித்திரங்கள், தடித்த உரு என்று இருக்கும். தீபாவளிக்கோ ஆண்டு விழாவுக்கோ ரூ 5 விலையில் ஏழெட்டுக் கதைகளோடு வரும். முடிவே இல்லாமல் படித்துக்கொண்டிருக்கலாம் போல இருக்கும். ராணி காமிக்ஸில் வடிவை மாற்றவே மாட்டார்கள். வாழ்வின் சகல கணங்களையும் ஒரே மாதிரி எதிர்கொள்ளும் துறவி போல ஒரே வடிவம்.
ஆறாம் வகுப்பிலிருந்து தெப்பக்குளம் அருகில் தியாகராசர் மாடல் பள்ளி. அதுவரை வேனில் போய்க்கொண்டிருந்தவன் பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி அவனியாபுரத்திலிருந்து பெரியார் நிலையம், அப்புறம் 4ம் நம்பரில் ஏறி தெப்பக்குளம் என்று போக ஆரம்பித்தேன். பலரும் 4A அனுப்பானடி செல்லும் பேருந்தில் ஏறி பள்ளிக்கு அருகே இறங்கிக் கொள்ள நான் மட்டும் தெப்பக்குளத்தில் இறங்கி தனியே நடந்து போவேன். இனிமேல் வாழ்வில் எல்லாவற்றையும் எனக்கு நானே செய்துகொள்ளலாம். பேருந்தில் பெரிய அண்ணன்களுடனும் அக்காக்களுடனும் பயணம் செய்வது கிளர்ச்சியூட்டக்கூடியதாயிருந்தது. அப்போது நான் வீட்டில் கிடைத்த சாண்டில்யன் நாவல்களைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பிறகு ஒரு நாள் பள்ளியில் நீயூ சென்ச்சுரி புக் ஹவுஸின்(NCBH) புத்தகங்கள் விற்றார்கள். நேர்த்தியான வடிவில் நம்ப முடியாத குறைந்த விலையில் ரஷ்ய நாவல்கள். விடிவெள்ளி (யார் எழுதியது என்று தெரியவில்லை) என்ற நாவல், அலெக்சாண்டர் பூஷ்கினின் காப்டன் மகள் போன்ற சில புத்தகங்கள் வழியாக ரஷ்ய இலக்கியம் அறிமுகமானது. சித்திரங்கள் இல்லாத எழுத்தைப் படிப்பதே பெரியவனுக்கு அழகு என்று நம்ப ஆரம்பித்தேன். தடியான, கார்க்கியின் ’தாய்’ நாவலை முடித்த போது பெரிய சாதனையச் செய்த மன எழுச்சியோடு வீதியில் இறங்கி நடந்தேன்.

ஒரு வகையில் பார்த்தால் நான் விட்டு வந்த இடத்திலேயே தமிழ் காமிக்ஸ் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. வாசகர்கள் அங்கேயே நின்று விட்டார்களோ என்று தோன்றுகிறது. தமிழில் காமிக்ஸ் சந்தை விரிவடையவே இல்லை. கடந்த இருபது வருடங்களில் தொலைக்காட்சி இளம் வயதினரிடையே வாசிப்பை, அதுவும் தமிழில், ஒழித்துக் கட்டியிருக்கிறது. தமிழ் காமிக்ஸைப் பொருத்தவரை பழைய வாசகர்களையே தக்க வைக்க பதிப்பகங்கள் (லயனின் விஜயன் ஒரு போராட்டமாகவே இதை முன்னெடுக்கிறார்) போராட வேண்டிய சூழல். விரிவடையாத சந்தையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட முடியாது என்பதே உண்மை.

சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் ஆலன் மூரின் ’ஃப்ரம் ஹெல்’ (Allan Moore-From Hell) வழியாக காமிக்ஸில் நுழைந்தேன். ஆர்ட் ஸ்பீகல்மேனின் ’மாஸ்’ (Maus), ஒசாமு டெசுகாவின் ’புத்தா’ (Osamu Tezuka –Buddha) என்று க்ராஃபிக் நாவல்கள் வழி இழந்ததை மீட்டெடுக்க முயல்கிறேன். இணையம் பெரிய வரம்தான். இப்போது, எனது லாப்டாப்பின் 14 இன்ச் LED திரையில், சின்னச் சின்னக் கட்டங்கள் வழியே காமிக்ஸ்கள் வாழ்வைப் பிரதியெடுத்துக் கொண்டேயிருக்கின்றன. ஓயாமல்.